அரசாங்கத்தின் அஸ்வெசும நிவாரணத் திட்டம் மற்றும் உலக உணவுத் திட்டம் முன்னெடுக்கும் நிவாரண உதவித் திட்டங்களில் பெருந்தோட்ட மலையக மக்கள் நேரடியாக உள்வாங்கப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.
நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையே நடைபெற்ற கலந்துரையாடல் இவ்விடயம் வயுறுத்தப்பட்டது.
தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் அதன் தலைவர் மனோ கணேசன், பிரதித் தலைவர் வே.இராதாகிருஸ்ணன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் ஆகியோரும் நிதி இராஜாங்க அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
பெருந்தோட்ட பகுதிகளில் ஒரே வீட்டில் பல குடும்பங்கள் வாழ்வதாகவும் சில குடும்பங்கள் தற்காலிக குடியிருப்புகளில் வாழ்வதாகவும் அரசாங்கத்தின் நிவாரண திட்டங்களில் தொடர்ச்சியாக இவர்கள் புறக்கணிக்கப்படுவதால் இனிவரும் காலங்களில் முன்னெடுக்கப்படும் நிவாரணத் திட்டங்களில் ஒரே வீடுகளில் வாழும் பல குடும்பங்கள் மற்றும் தற்காலிக குடியிருப்புகளில் வாழும் குடும்பங்களும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் எடுத்து கூறினார்.
இதனை ஏற்றுக் கொண்ட நிதி ராஜாங்க அமைச்சர் தனது செயலாளருக்கு இது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு பணித்தார்.