நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலுள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போக்களுக்கு இந்திய அரசாங்கத்தினால் கடன் உதவித் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட புதிய பஸ்கள் கையளிக்கும் நிகழ்வு இன்று (09) போக்குவரத்து அமைச்சர் திரு.பந்துல குணவர்தன தலைமையில் நுவரெலியா கிரகரி வாவி பகுதியில் இடம்பெற்றது.
நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களில் உள்ள ஏழு டிப்போக்களுக்கு 26 புதிய பஸ்கள் இதன்போது கையளிக்கப்பட்டன. மேலும் இந்த புதிய பஸ்களை தோட்ட மற்றும் கிராமப்புற வீதிகளில் பயணிக்கவும், அதன் மூலம் கிராமப்புற மற்றும் தோட்டப்புற மக்களுக்கு முறையான போக்குவரத்து வசதிகளை வழங்குவதே இதன் நோக்கமாகும்.
இந்த புதிய பஸ்கள் நுவரெலியா மாவட்டத்தில் அட்டன், நுவரெலியா, கொத்மலை, வலப்பனை, ஹங்குராங்கெத்த மற்றும் கண்டி மாவட்டத்தில் நாவலப்பிட்டி மற்றும் கம்பளை ஆகிய டிப்போக்களுக்கே வழங்கப்பட்டுள்ளன.
இதன்போது, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சி. பி. ரத்நாயக்க, எஸ். பி. திசாநாயக்க, மருதப்பாண்டி ரமேஸ்வரன் மற்றும் டிப்போ அத்தியட்சகர்கள், டிப்போ ஊழியர்கள், அரச உத்தியோகத்தர்கள் என பெருமளவானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
(க.கிஷாந்தன்)