பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அந்நாட்டின் தேசிய பொறுப்புடமை அமைப்புக்கு (என்ஏபி) இஸ்லாமாபாத் சிறப்பு நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது.
இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் ஆஜராக வந்த இம்ரான் கானை ரேஞ்சர் படையினர் அதிரடியாக சுற்றி வளைத்து செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
இதையடுத்து, இரவு முழுவதும் ரகசிய இடத்தில் வைத்து முன்னாள் பிரதமர் இம்ரான் கானிடம் என்ஏபி அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அதன் பின்னர், காவல் தலைமையகத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் மூடிய அறைக்குள் இம்ரான் கான் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.
ஊழல் வழக்கு தொடர்பாக அவரிடம் மேலும் விரிவாக விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் 10 நாட்கள் காவலில் வைக்க என்ஏபி அனுமதி கோரியது.
அதனை ஏற்க மறுத்த நீதிமன்றம், இம்ரான் கானை 8 நாட்கள் மட்டும் காவலில் வைத்து விசாரிக்க நேற்று அனுமதி வழங்கியது.
இம்ரான் கான் கைது செய்யப்பட்டுள்ளதையடுத்து, பாகிஸ்தான் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.
போராட்டக்காரர்கள் பொதுச் சொத்துகளுக்கு பெருமளவில் சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
இதனிடையே, இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) அலுவலகங்களில் என்ஏபி அதிகாரிகள், போலீஸார் சோதனையில் ஈடுபட்டு பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாகவும், பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இம்ரான் கான் கைது தொடர்பாக ட்விட்டர், பேஸ்புக், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவுவதை தடுக்க மொபைல் இணைய சேவைகளை ரத்து செய்ய பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், நாடு முழுவதும் பள்ளிகளை மூடவும் பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்க கூடுதல் ராணுவப் படைகள் அனுப்பப்பட்டுள்ளன.