காலையில் டப்பிங் ஸ்டூடியோவில் நடிகர் மாரிமுத்து பேசிக்கொண்டிருந்த போதே அவருக்கு படபடப்பு வந்துள்ளது- அவரே காரை எடுத்து மருத்துவமனைக்கு சென்று அட்மிட் ஆகி உள்ளார் என அவரது நண்பரும் நடிகருமான கமலேஷ் கூறினார்.

காலையில் டப்பிங் ஸ்டூடியோவில் உங்களோடு தானே நடிகர் மாரிமுத்து இருந்தார். அவருக்கு என்ன நடந்தது என்று கூறுங்கள் என பிரபல டிஜிட்டர் ஊடகம் நடிகர் கமலேஷ் இடம் கேட்டது. அப்போது பேசிய நடிகர் கமலேஷ், “காலை 6.30மணிக்கு டப்பிங்கிற்கு நடிகர் மாரிமுத்து வந்திருக்கிறார். அவர் இன்று வேறு சூட்டிங் போவதாக இருந்தது. எதிர்நீச்சல் இல்லாமல் வேறு சூட்டிங் போறதாக இருந்தது.

அதனால் டப்பிங் முடிப்பதற்காக வந்துள்ளார். நான் ஒரு 8 மணியின் போது வந்தேன். எனக்கும் டப்பிங் இருந்தது. நானும் வந்தேன். அப்போது அவர் டப்பிங் பேசிக்கொண்டிருந்தார். பேசும் போதே ஒருவித படபடப்புடன் இருந்தார். பொதுவாக ஏசியை ஆப் செய்துவிட்டு டப்பிங் பேசும் போது, வியர்த்து கொட்டியபடி படபடப்பு எல்லாருக்குமே வரும். . உள்ளே ஏசி போட்டு, திரும்பவும் 2நிமிடம் வைத்தால் சரியாகிவிடும். அப்படித்தான் என நினைத்தேன். ஆனால் பேசி முடித்த உடனே டக்கென வெளியே வந்துவிட்டார்.

 

வெளியே வந்த போது அவரிடம் நான் கேட்டேன். ரொம்ப வியர்த்து கொட்டுகிறது.. என்னாச்சு.. ஒரு மாதிரியாக இருக்குறீங்க, ஏதாவது பிரச்சனையா என நான் கேட்டேன். அப்போது அவர் என்னிடம் பிரச்சனை எல்லாம் ஒன்னும் இல்லைப்பா என்றார். அப்போது நின்றாரு.. நின்று கதவை திறந்து வெளியில் போய்விட்டார்.சரி காற்றுவாங்க போகிறாரோ என்று நினைத்தேன்.

அந்த கேப்பில் காரை எடுத்துக்கொண்டு அவரே ஓட்டிக்கொண்டு போயிருக்கிறார். சூர்யா ஆஸ்பத்திரிக்கு போகும் வழியிலேயே அவரது மனைவிக்கு போன் பண்ணி, எல்லாம் ரெடியாக இருங்கம்மா.. காவேரி ஆஸ்பத்திரிக்கு போகனும்னு சொல்லியிருக்காரு.. சொல்லிட்டு காரை டிரைவ் பண்ணிட்டு போயிருக்காரு..

சூர்யா ஆஸ்பத்திரி வாசலுக்கு போகும் போது அவர் நிலைகுலைந்து போயிருக்கிறார். அப்போது நான் டப்பிங் முடித்துவிட்டு எங்கு இருக்கிறார் என தேடினேன். ஒருவேளை பாத்ரூமில் வழுக்கி விழுந்துவிட்டாரா என்று தேடி போய் பார்த்தேன். வண்டியை காணவில்லையே என்று நான் தேடி பார்த்துவிட்டு போன் அடிக்கிறேன்.. சூர்யா ஆஸ்பத்திரியில் மாரிமுத்து அவர்களின் மகள் போனை எடுத்தார். அவரது அப்பா இறந்தது குறித்து தெரிவித்தார்.

 

உடனே வாங்க என்றார். நாங்களம் உடனே ஓடி சென்றோம். அவர் காலை 6.30 மணியில் இருந்தே டப்பிங் பேசி வந்துள்ளார். டப்பிங் முடியும் போது தான் படபடப்பு வந்து இருக்கிறது. அதன்பிறகு தான் நடந்துள்ளது. போன் வந்த உடன் உடனே ஓடிச்சென்று ஐந்து நிமிடத்தில் ஆஸ்பத்திரியில் போய் பார்த்தோம். அங்கு மருத்துவர்களும் நிறைய முயற்சி செய்துள்ளார்கள். ஆனால் முடியவில்லை என்றார்.

மூச்சுதிணறல் இருந்தது என்று சொன்னாரா, ஏதேனும் உதவி கேட்டாரா என்று செய்தியாளர் கேட்டார். அதற்கு பதில் அளித்த கமலேஷ், மாரிமுத்து என்னிடம் மூச்சுத்திணறல் என்று கூறவில்லை. பிரச்சனையா என்று கேட்டபோதும். ஒன்றும் இல்லை என்றே என்னிடம் கூறினார் என தெரிவித்தார்

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *