புத்த ரஷ்மி தேசிய வெசாக் கொண்டாட்டத்தை முன்னிட்டு காலி முகத்திடல் ஷங்ரிலா பசுமை மைதானத்தில் இரண்டாவது நாளாக நேற்று (06) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்னதான நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.
இக்கட்டான காலத்தினை நிறைவு செய்து, நான்கு வருடங்களின் பின்னர் வெசாக் பண்டிகையை கொண்டாடும் வாய்ப்பு மக்களுக்கு இம்முறை கிடைத்துள்ளதுடன், மக்கள் ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் கலந்துகொண்டமை விசேட அம்சமாகும்.
சிங்கப்பூர் மகா கருணா பௌத்த சங்கம் மற்றும் சிங்கப்பூரின் வில்லிங் ஹார்ட்ஸ் (Wiling Hearts) அறக்கட்டளை ஆகியவற்றின் பங்களிப்புடன், மே 05 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்ட அன்னதான நிகழ்வை, சிங்கப்பூர் மகா கருணா பௌத்த சங்கத்தின் தலைவர் கலாநிதி வண.கரதெட்டியன குணரதன தேரர் மற்றும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதி தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னபிரிய, பணிப்பாளர் நாயகம் (சமூக அலுவல்கள்) ரஜித் கீர்த்தி தென்னகோன் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
அதேநேரம், வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான வெசாக் தோரணத்தின் மின்விளக்குகளும் ஒளியேற்றப்பட்டன.
புத்த ரஷ்மி தேசிய வெசாக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, காலி முகத்திடல் ஷங்ரிலா பசுமை மைதானம் மற்றும் ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் மே 03, 04, 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் வெசாக் தோரணங்கள், வெசாக் கூடுகள், பக்திப் பாடல்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இதேவேளை, கொழும்பு ஹுனுபிட்டிய கங்காராம விகாரையினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘புத்த ரஷ்மி’ வெசாக் வலயத்தை பிரதமர் தினேஷ் குணவர்தன திறந்து வைத்தார்.
கங்காராம விகாரையின் விகாராதிபதி கலாநிதி வண. கிரிந்தே அஸ்ஸஜி தேரர், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, ஜி.எல்.பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
கங்காராம புத்த ரஷ்மி வெசாக் வலயம் இன்று (07) நிறைவடையவுள்ளதுடன், அதனை நிர்மாணித்தவர்களுக்கு, இன்று இரவு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.