சட்டம், ஒழுங்கு உள்ளிட்ட அனைத்து பொலிஸ் அதிகாரங்களும் பிரத்தியேகமாக மத்திய அரசாங்கத்திடம் மாத்திரமே ஒப்படைக்கப்பட வேண்டும் என சுற்றாடல் அமைச்சரும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினருமான நசீர் அஹமட், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அதில் பொலிஸ் அதிகாரம் உட்பட பல விடயங்களை விளக்கியிருக்கிறார்.
குறிப்பாக இலங்கைவாழ் முஸ்லிம் மற்றும் சிங்கள சமூகங்களின் பங்கேற்பின்றி 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்துவதன் மூலமோ அல்லது வேறு நடவடிக்கை மூலமோ கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் ஒரு போதுமே நீடித்த நிலைபேறான தீர்வாக அமையாது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அதிகாரம் பரவலாக்கப்படுவதை முஸ்லிம் மக்கள் ஆதரிக்கின்ற போதிலும், 13 ஆவது திருத்தம் ஏனைய விடயங்களில் திருத்தப்பட வேண்டும் என அவர் யோசனை முன்வைத்துள்ளார்.
மாகாணங்களை இணைப்பதற்கான தத்துவத்தினை அகற்றும் வகையில், அரசியலமைப்பின் உறுப்புரை 154 அ (03) நீக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் நசீர் அஹமட் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
சட்டம், ஒழுங்கு உள்ளிட்ட அனைத்து பொலிஸ் அதிகாரங்களும் பிரத்தியேகமாக மத்திய அரசாங்கத்திடம் மாத்திரமே ஒப்படைக்கப்பட வேண்டும் எனவும் அவரது கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.