திட்டமிட்ட சில கும்பல்களினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் தோற்றுவிக்கப்படும் சில அத்துமீறல்கள், குற்றச் செயல்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் தொடர்பில் இன்றைய தினம் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன மற்றும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண ஆகியோரை கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான சிவ.சந்திரகாந்தன்¶ அவர்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மயிலத்த மடு மாதவனை போன்ற பிரதேசங்களில் தொடர்ச்சியாக ஏற்படுகின்ற அத்துமீறல்கள் அதனுடன் தொடர்புபட்ட பிணக்குகள் போன்றவற்றினை சரி செய்யும் முகமாக குறித்த பிரதேசத்தில் நிரந்தரமான பொலிஸ் சோதனைச் சாவடியினை மிக விரைவில் அமைப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
அதனுடன் இணைந்ததாக மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இடம்பெறக்கூடிய சட்டவிரோத மதுபான உற்பத்தி, விற்பனை போதைப்பொருள் கடத்தல் அவற்றுடன் தொடர்புபட்ட குற்றச்செயல்கள் போன்றவற்றை தடுப்பது தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த பொலிஸ் மா அதிபர் தமிழர்கள் பொலிஸ் சேவையில் இணைவது குறைவாக இருப்பதாகவும் அவர்கள் தங்களது சமூகத்திற்கு சேவையாற்றும் வண்ணமாக பொலிஸ் சேவையில் இணைந்து பணியாற்ற வேண்டுமெனவும் அதனை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் இராஜாங்க அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.