மன்னார் மறைமாவட்டத்தின் மருதமடு அன்னையின் ஆவணி மாதத்தின் பெருவிழாவை நேரலையாக ஒளிப்பரப்பும் மன்னார் கத்தோலிக்க ஊடக தொகுப்பாளர் திடீர் மரணம்.
இச்சம்பவம் ஞாயிறு (13) இரவு மருதமடு அன்னையின் ஆலயப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மன்னார் மருதமடு அன்னையின் வருடாந்த ஆவணி பெருவிழா கடந்த 06.08.2023 அன்று ஞாயிற்றுக் கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
இப்பெருவிழா செவ்வாய்கிழமை 15.08.2023 அன்று காலை பெருவிழாத் திருப்பலியுடன் நிறைவுபெறுகின்றது.
இப்பெருவிழா கத்தோலிக்க நிகழ்வுகளை நேரலையாகத் தொகுத்து அனுப்பும் நபரான இவர் மன்னார் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள புதுக்கமத்தைச் சேர்ந்த ஜெகநாதன் டிரோன் (வயது 28) என்ற நபரே திடீர் மரணத்துக்கு உள்ளாகியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை (13) இரவு எட்டாம் நாள் நவநாள் ஒளிப்பரப்பு நிகழ்வுகளை முடித்துவிட்டு மடுவில் தனது நண்பர்களுடன் இரவு 11 மணியளவில் உரையாடிக் கொண்டிருந்தபோதே இவர் திடீரென மரணித்துள்ளதாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவரின் சடலம் தற்பொழுது மடுவிலிருந்து மன்னார் பொது வைத்தியசாலைக்கு உடற்கூற்று பரிசோதனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.
(வாஸ் கூஞ்ஞ)