இந்திய வம்சாவழியினரின் 200ஆம் ஆண்டும் தொழிலாளர் தினமும் எனும் தொனியில் இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி இம்முறை உலக தொழிலாளர் தினமான மே தினம் நுவரெலியாவில் முன்னனியின் பொது செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சதாசிவம் தலைமையில் நுவரெலியா வாசிகசாலை கேட்போர் கூடத்தில் இன்று (01) நடைபெற்றது.
நுவரெலியா தபால் நிலையத்துக்கு முன்பாக காமன்கூத்து நிகழ்வோடு பேரணி ஆரம்பமாகியது.
நிகழ்வில் கட்சியின் ஆதரவாளர்கள் முன்னாள் பிரதேச சபை மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துக்கொண்டனர்.
போராட்ட குணாம்சத்தை இழந்த எந்த சமூகத்தினாலும் அதன் அடையாளத்தை காப்பாற்றிக் கொள்ள முடியாது என்பதை வராலாறு நிரூபித்துள்ளது.
இலங்கையில் தனது 200வருட அவல வாழ்க்கையை தொடர்ந்து கொண்டிருக்கும் எமது சமுதாயம் துரதிஷ்டவசமாக இன்று மறக்கப்பட்ட சமூகமாகவே வாழ்ந்து வருகிறது.
ஒரு சமூகமாக மாத்திரமன்றி தொழிலாளர்களாகவும் தமக்குறிய உறிமைகளுக்காக குரல் கொடுக்காத சமூகமாக நாம் ஆக்கப்பட்டுவிட்டோம் என முன்னனியின் பொதுசெயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான திரு.சதாசிவம் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
200வருடங்கள் என்பது எவ்விதத்திலும் பெருமை கொள்ளும் வரலாற்றை எமக்கு தரவில்லை மாறாக ஏனைய சமூகங்களுடன் ஒப்பிடும்போது நாம் எவ்வாறு பின்தள்ளப்பட்டுள்ளோம் என்பதை காட்டுகின்றது.
தென்கிழக்கு ஆசியாவிலேயே பலமிக்க தொற்சங்க அமைப்பாக எமது மக்கள் அணிதிரண்டு வரலாறு 50-60 களில் நிலவியது அன்றைய தொழிற்சங்க பலம் எமக்கு சமூக பலமாகவும் இருந்தது.
ஆனால் தெளிவற்ற கொள்கைகள் கொண்ட அடுத்தடுத்த தலைமைகளால் எமது சமூகம் பலம் இன்று சிதறிகிடக்கின்றது.
எமது வாழ்வாதார தேயிலை உற்பத்தியும் நலிவடைந்து வருகின்றது. தொழில் வாய்ப்பிற்காக எமது மக்கள் வெளிமாவட்டங்களுக்கு இடம்பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இதே நிலை தொடர்ந்தால் இன்னும் 10-20 ஆண்டுகளில் நாம் தனி தனி நபர்களாக வாழும் நிலையே ஏற்படும் என்றார்.