“தலைமன்னார் – மாத்தளை“ போராட்டத்துக்கு ஒட்டுமொத்த மக்களும் ஆதரவளிக்க வேண்டும்!

மலையக மக்களது உரிமைகளுக்காக இந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் குரல்கொடுக்க வேண்டும். அவர்கள் மேற்கொள்ளும் நடைபயணத்தில் பங்கேற்குமாறு மக்கள் பேரவைக்கான இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

மக்கள் பேரவைக்கான இயக்கம் இன்று கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அதன் உறுப்பினர் லயிறு வீரசேகர, இவ்வாறு அழைப்பு விடுத்தார்.

அவர் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில்,

தேயிலை தொழில்துறை என்பது இந்த நாட்டுக்கு அதிகமாக அந்நிய செலாவணியை கொண்டுவரும் ஒரு துறையாகும்.

ஆனால், 200 வருடங்களுக்கும் மேலாக தோட்டத் தொழிலாளர்களாக பணியாற்றும் இந்த மக்கள் அடிமைகளாகவே நடத்தப்படுகின்றனர்.

உலகில் தரமான தேயிலை இலங்கையில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. தேயிலை தொழில்துறை பாரிய இலாபம் ஈட்டும் துறையாகவுள்ளது. கம்பனிகள் அனைத்தும் இலாபமீட்டுபவையாகவே உள்ளன.

தேயிலை தொழில்துறை இலாபமீட்டும் துறை என்றால், நாட்டுக்கு அதிகமான அந்நிய வருமானம் இதன்மூலம் வருகிறது என்றால், கம்பனிகள் இலாபம் அடைகின்றன என்றால், தோட்டத் தொழிலாளர்கள் எதற்கு 1000 ரூபாவுக்கு போராடுகின்றனர்.

இந்த நாட்டில் இன்னமும் முகவரி அற்ற ஒரு மக்கள் என்றால் அது மலையக மக்கள்தான். இலவசக் கல்வி, சுகாதாரம் மற்றும் ஏனைய அரச சேவைகள் இவர்களுக்கு கிடைப்பதில்லை.

மலையகத் தமிழர்கள் அடிமைகளாக இந்த நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர். நாட்டுக்காக உழைத்த இவர்களை பலவந்தமாக இந்தியாவுக்கு அனுப்பினர்.

அடிமைகளாக அழைத்துவரப்பட்ட இந்த மக்கள் 200 வருடங்களின் பின்னரும் கம்பனிகளின் அடிமைகளாகவே வாழ்கின்றனர்.

இவர்களுக்கு வீடு இல்லை, முகவரி இல்லை. இவர்களுக்கான கடிதங்கள் தோட்ட நிர்வாகத்தினருக்குதான் அனுப்படுகிறது. நேர்காணல்களுக்கு கடிதங்கள் வந்தால் அதனை வழங்குவதா இல்லையா என தோட்ட நிர்வாகிதான் தீர்மானிக்கிறார்.

இந்த நாட்டில் அடிப்படை உரிமைகள்கூட இல்லாத ஒரு மக்களாகதான் இவர்கள் வாழ்கின்றனர். தோட்டங்களில் எந்தவொரு தொழில் சட்டமும் பின்பற்றப்படுவதில்லை. ஈ.பி.எப்., ஈ.டி.எப்கூட செலுத்தப்படுவதில்லை.

பெருந்தோட்டங்களை அண்டி வைத்தியசாலை கட்டமைப்பு மிகவும் மோசமாக உள்ளது.

இந்த மக்கள் வியர்வையும் இரத்தத்தையும் சிந்தி உழைப்பதால்தான் இந்த நாட்டுக்கு அந்நிய செலவாணி வருகிறது. தோட்டங்களில் பணிப்புரியும் கர்ப்பிணி பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை.

அவர்களது உரிமைகளை வென்றெடுக்க மன்னாரில் இருந்து மாத்தளைவரை நடைபயணத்தை மேற்கொள்கின்றனர்.

1000 ரூபா சம்பளத்தைகூட இந்த மக்கள் போராடிதான் பெற்றுக்கொண்டனர். அங்கிருந்த எந்தவொரு அரசியல் தலைவர்களாலும் ஆயிரம் ரூபாவைக்கூட இவர்களுக்கு பெற்றுக்கொடுக்க முடியாது போனது. இந்த நாட்டு மக்கள் இவர்களுக்காக பாதையில் இறங்க சேண்டும்

இந்த மக்களை மக்களாக மதிக்க வேண்டும். பஸில் ராஜபக்ஷ போன்றோர் இவர்கள் நாட்டுக்கு கொண்டுவந்த நிதியை கொள்ளையடித்தனர்.

இந்த மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல்வாதிகள்

தமது தேவைகளுக்காக இந்த மக்களின் பிரச்சினைகளை பயன்படுத்திக்கொண்டனர்.

தொண்டமான்கள் வெட்கமின்றி தமது சுயநலன்களுக்காக இந்த மக்களின் பிரச்சினைகளை பயன்படுத்திக்கொள்கின்றனர்.

தோட்டத் தொழிலாளர்களின் எதிர்காலத்தை இல்லாதொழித்துள்ளனர். இவர்களது உரிமை எமது உரிமையும் ஆகும்.

தோட்டத் தொழிலாளர்கள் அரச சேவை மற்றும் ஏனைய சேவைகளை பெற்றுக்கொள்ள உள்ள மொழித் தடைகள் நீக்கப்பட வேண்டும்“ என்றார்.

 நன்றி N.S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *