(வாஸ் கூஞ்ஞ) 26.08.2023

மன்னார் மாவட்டத்தில் சகல இனங்களுக்கிடையேயும் ஒற்றுமை நிலவி வருகின்றது. இது மேலும் பலம் பொருந்தியதாக அமைய வேண்டும் என்ற நோக்கிலேயே சகல இன மக்களும் இதில் கலந்து கொள்ளும் ஒரு வாய்ப்பாக மன்னாரில் முதன்முதலாக தேசிய மீலாத் நபி விழாவை நடாத்துகின்றோம் என கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் இவ்வாறு தெரிவித்தார்.

புத்தசாசன சமய விவகார மற்றும் கலாச்சார அலுவலர்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க அவர்களின் பங்கேற்புடன் மன்னார் மாவட்ட செயலகத்தில் சனிக்கிழமை (26) காலை தேசிய மீலாத் நபி விழாவுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதைத் தொடாந்து இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்

நடைபெற இருக்கும் 39 வது தேசிய மீலாத்துன் நபி விழாவானது இந்நடப்பு வருடத்தில் மன்னார் மாவட்டத்தில் நடைபெறுவதற்கான  தீர்மானத்தை புத்தசாசன சமய விவகார மற்றும் கலாச்சார அலுவலர்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க அவர்கள் மேற்கொண்டுள்ளார்.

ஆகவே இவ்விழாவை மிகவும் திறம்பட செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இது தேசிய மீலாத்துன் நபி  விழாவாக இருந்தாலும் மன்னார் மாவட்டத்தில் அனைத்து மக்களும் எவ்வாறு ஒற்றுமையாக இருக்கின்றார்கள் என்பது தெரியும்

இவ்விழா மூலம் அனைத்து மக்களும் தொடர்ந்து ஒற்றுமையை பலப்படுத்தும் ஒரு தேசிய விழாவாக அமையவே மன்னாரில் இத்தேசிய விழா முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்திலுள்ள அனைத்து சமூகம் அதிகாரிகள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் இவ்விழா மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற நோக்குடனே இங்கு கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்த விழாவுக்கான சகல ஏற்பாடுகளையும் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும்படி இதன் பொறுப்பு வாய்ந்த அமைச்சர் அவர்கள் சகல அதிகாரிகளுக்கும் ஆலோசனைகள் வழங்கி  பணிப்புரை விடுத்துள்ளார்.

அமைச்சர் அவர்களின் மாவட்டத்தில் ஒரு பாரிய நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற போதும் ஒரு மணித்தியாலமாவது இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் இதில் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கியிருப்பதையிட்டு அவருக்கு நாம் நன்றி தெரிவித்துக் கொள்ளுகின்றோம். என்றார்.

(வாஸ் கூஞ்ஞ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *