சிரேஷ்ட ஊடகவியலாளர் அஸீஸ் நிசாரூடீன்
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர மற்றும் உப பொலிஸ் பரிசோதகர்களான சுகத் மெண்டிஸ் மற்றும் நிஷாந்த சில்வா ஆகியோர் கம்பஹா நீதவான் நீதிமன்றில் நேற்று இடம்பெற்ற வழக்கு விசாரணையில் போது விடுவிக்கப்பட்டனர்.
இந்த விடுதலைக்கு கொழும்பு குற்றப்பிரிவு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், ஷானி அபேசேகர மற்றும் ஏனைய சந்தேக நபர்கள் சார்பில் சட்டத்தரணி முன்வைத்த வாதங்களின் பிரகாரம் சந்தேகநபர்கள் நால்வரையும் குற்றமற்றவர்கள் என கம்பஹா நீதவான் ஷிலானி பெரேரா விடுதலை செய்தார்.
கோடீஸ்வர தொழிலதிபர் முகமது ஷியாமை கொலை செய்த வழக்கில், டிஐஜி வாஸ் குணவர்தன அவரது மகன் மற்றும் நான்கு பேர் தண்டனை பெற்றனர். இவா்களை சிக்க வைப்பதற்காக சில இடங்களில் ஆயுதங்களை மறைத்து வைத்திருந்து குறித்த வழக்கிற்கு பொய் சாட்சியை உருவாக்கினார்கள் என்ற குற்றச்சாட்டை சுமத்தியே ஷானியும் ஏனைய பொலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு 11 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டனா்.
ராஜபக்ஷகளுக்கு ஷானி மீது தீராத பகையிருந்தது. ராஜபக்ஷகளின் முன்னைய ஆட்சியின் போது இடம்பெற்ற முக்கிய குற்றங்களை திறமையாக கையாண்டவர் தான் இந்த ஷானி அபேசேகர.
2019 ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றதன் பின்னர் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்தது. இதன் பின்னரே ஷானியும் ஏனைய அதிகாரிகளும் கைது செய்யப்பட்டனர். இது முன்னாள் சீஐடி இயக்குனருக்கு எதிரான கோட்டாபய அரசாங்கத்தின் பழிவாங்கும் நடவடிக்கை என பலராலும் விமர்சிக்கப்பட்டது.
11 மாத காவலுக்குப் பிறகு, மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த வழக்கு பொய்யாக புனையப்பட்ட வழக்கு என்று கூறி இவர்களுக்கு பிணை வழங்கியது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு இவ்வாறு இருந்த போதிலும், கம்பஹா நீதிமன்ற நீதிபதி மஞ்சுள கருணாரத்ன ஷானி உட்பட அதிகாரிகளை விசாரணையிலிருந்து விடுவிக்க மறுத்ததன் காரணமாக, கம்பஹா நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்தது.
பிரதிவாதிகளை விசாரணையிலிருந்து விடுவிக்குமாறு சட்டமா அதிபர் விடுத்த பணிப்புரைக்கமைய நேற்று இவர்கள் வழக்கிலிருந்து விடுதலை பெற்றனர்.