( நூரளை பி. எஸ். மணியம் )
அட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் ரதெல்ல கார்லிபேக் பிரதேசத்தில் நேற்று (27) ஞாயிற்றுக்கிழமை நபர் ஒருவர் பாதையில் வெள்ளைக் கோட்டில் வீதியைக் கடக்க முற்பட்டபோது மிக வேகமாக சென்ற லொறி மோதியதில் அவர் உயிரிழந்துள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
நானுஓயா ரதெல்ல சமர்செட் தோட்டத்தின் லேங்டல் பிரிவில் வசித்து வந்த தோட்ட தொழிலாளி யான ராஜு கிருஷ்ணகுமார் (வயது 33) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று (27) ஞாயிற்றுக்கிழமை மாலை சமர்செட் தேயிலை தொழிற்சாலையில் தேயிலை கொழுந்து பைகளை இறக்கிவிட்டு அட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் ரதெல்ல கார்லிபேக் வழியாக தனது வீட்டுக்கு திரும்பி சென்றுக்கொண்டிருந்த
போது ரதெல்ல கார்லிபேக் பகுதியிலுள்ள பாதையின் வெள்ளைக் கோட்டில் வீதியை கடக்க முற்பட்டபோது நுவரெலியா பகுதியிலிருந்து அதி வேகமாக வந்த லொறியொன்று மோதியதில் பலத்த காயங்களுக்குள்ளானார்.
அவரை அதே லொறியில் சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். படுகாயமடைந்த நபர் நுவரெலியா பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கண்டி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (28) திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார்.
லொறியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் நானுஓயா பொலிஸார் இதுதொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.