வடக்கு, கிழக்கு பகுதிகளில் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு தொிவித்தும், தமிழர் இன, மத அடையாள அழிப்புக்கு எதிராகவும் இன்று பூரண ஹர்த்தால் அனுட்டிக்கப்பட்டு வருகிறது.

தமிழர் தாயகத்தின் 8 மாவட்டங்களிலும் இன்று காலை சகல வர்த்தக நிலையங்களையும் மூடி வர்த்தக சமூகம், பொது அமைப்புக்கள், அரசியல் தரப்புக்கள், தொழிற்சங்கங்கள் ஒத்துழைப்புடன் ஹர்த்தால் அனுட்டிக்கப்பட்டு வருகின்றது.

யாழ்ப்பாணம்

அந்தவகையில்  யாழ்ப்பாணத்திலும் ஹர்த்தாலுக்கு  பூரண ஆதரவை மக்கள் வழங்கியுள்ள நிலையில் ,    மக்கள் நடமாட்டமின்றி நகரங்கள்  வெறிச்சோடிக் காணப்படுகின்றது.

 

திருகோணமலை

திருகோணமலை மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம் மக்கள் ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் அந்தப் பகுதிகளில் அனைத்து துறைகளும் இன்று முடங்கியுள்ளன.

 

திருகோணமலையில் தமிழ், முஸ்லிம் மக்களின் வர்த்தக நிலையங்கள், கடைகள் பூட்டப்பட்டு காணப்படுகின்றன. பாடசாலைகளுக்கு மாணவர்கள் வருகைதரவில்லை. இதனால் பாடசாலைகள் இயங்கவில்லை.

 

மட்டக்களப்பு

மட்டக்களப்பில் இந்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு தமிழ் கட்சிகள் அழைப்பு விடுத்திருந்த நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஹர்த்தால் காரணமாக கடைகள் யாவும் மூடப்பட்டுள்ளதுடன் போக்குவரத்து சேவைகளும் இடம்பெறவில்லை.

 

இதனால் மட்டக்களப்பு மாவட்டத்திலும் வீதிகள் வெறிச்சோடி மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

  மன்னாரும் முடங்கியது

இலங்கை அரசாங்கத்தினால் பயங்கரவாத சட்டத்திற்கு மாற்றாக புதிதாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத தடுப்பு சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், முப்படையினரின் காணி அபகரிப்பு உட்பட வனவள திணைக்களம், தமிழ் முஸ்லிம் மக்களின் காணிகளை கபளீகரம் செய்கின்றமை, கிழக்கில் மேய்ச்சல் தரைகளில் சிங்கள குடியேற்றங்கள் இடம் பெறுவதையும் நிறுத்தக் கோரியும், மதஸ்தலங்கள் தாக்கப்படுகின்றமை தமிழ், முஸ்லிம் மக்கள் வாழும் பகுதியில் திட்டமிட்டு இடம்பெறும் சிங்கள குடியேற்றங்களை தடுக்க கோரியும் இன்றைய தினம் (25)  வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதுடன் தனியார் போக்குவரத்து சேவையும் முடங்கியுள்ள அதேவேளை மீனவர்கள் தொழிலுக்கு செல்லவில்லை.

அத்துடன் பாடசாலைக்கு மாணவர்களின் வருகையும் குறைவாக காணப்பட்டமையை அவதானிக்க கூடியதாக இருந்தது.

அதேவேளை அரச திணைக்களங்கள் மற்றும் அரச போக்குவரத்து சேவைகளும் வழமைபோல் இடம் பெற்ற போதும் மக்களின் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *