அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் காசாவை மீண்டும் ஆக்கிரமித்தால் அது மிகப்பெரும் தவறாக அமைந்துவிடும், என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்கத் தொலைக்காட்சி சேனலான சி.பி.எஸ்.ஸிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அந்தச் சேனலில் ஒரு நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “இஸ்ரேல் மீண்டும் காசாவை ஆக்கிரமிப்பது தவறு,” என்று கூறினார்.
ஆனால், “தீவிரவாதிகளை” அகற்றுவது “மிகவும் அவசியமானது” என்று அவர் கூறினார். மேலும், ஹமாஸ் ‘முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டுமா’ என்று கேட்கப்பட்டக் கேள்விக்கு, ‘ஆம்’ என்று பைடன் பதிலளித்தார்.
மேலும் பேசிய அவர், “பாலத்தீனத்திற்கென ஒரு பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும், பாலத்தீன அரசு அமைவதற்கு ஒரு பாதை இருக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.
‘காசாவை ஆக்கிரமிப்பது இஸ்ரேலின் விருப்பமல்ல’ “காசாவை ஆக்கிரமிப்பதற்கோ அல்லது காசாவில் தங்குவதற்கோ இஸ்ரேலுக்கு விருப்பம் இல்லை,” என்று ஐ.நா.வுக்கான இஸ்ரேல் தூதர் கிலாட் எர்டன் கூறியுள்ளார்.
பைடனின் பேட்டிக்குப் பிறகு எர்டன் இவ்வாறு கூறியுள்ளார். சி.என்.என் தொலைக்காட்சியில் தோன்றிய கிலாட் எர்டன், “எங்கள் வாழ்விற்காக நாங்கள் போராடுவதால் ஹமாஸை அழிப்பதுதான் ஒரே வழி. எனவே நாங்கள் தேவையானதைச் செய்ய வேண்டும்,” என்று கூறினார்.