வவுனியா, இரட்டை கொலை சந்தேக நபர்கள் மற்றும் தேடப்படும் நபர்களின் வங்கிக் கணக்குகளை பரிசோதிக்க குற்றப் புலனாய்வு திணைக்கள கொலை விசாரணைப் பிரிவுக்கு (சிஐடி) அனுமதி வழங்கியதுடன், அவர்கள் வெளிநாடு செல்ல தடை விதித்து அவர்களது கடவுச் சீட்டுக்களையும் முடக்க வவுனியா நீதிமன்றம் இன்று (24.08) உத்தரவிட்டது
வவுனியா, தோணிக்கல் பகுதியில் கடந்த மாதம் 23 ஆம் திகதி அதிகாலை இடம்பெற்ற இரண்டைக் கொலை சம்பவம் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டு வவுனியா நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் தொடர்பான விசாரணை வவுனியா நீதிமன்றில் இடம்பெற்று வந்த நிலையில் இன்றையதினம் (24.08) அடையாள அணிவகுப்புக்கு திகயிடப்பட்டிருந்தது
எனினும் அடையாள அணிவகுப்புக்கு உரிய நபர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதானால் குறித்த வழக்கு எதிர்வரும் 7 ஆம் திகதிக்கு திகயிடப்பட்டது.
குறித்த வழக்கு விசாரணையின் போது குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரின் கொலை விசாரணைப் பிரிவினரால் முதலாம் மற்றும் இரண்டாம் சந்தேக நபர்களிடம் பெறப்பட்ட வாக்கு மூலம் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டதுடன்
பிரதான சந்தேக நபரான 6ஆம் சந்தேக நபரை மீள விசாரணை செய்ய மன்றில் அனுமதி கோரியிருந்தனர். இதற்கு மன்று அனுமதி வழங்கியிருந்தது.
அத்துடன், குறித்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்கள கொலை விசாரணைப் பிரிவினரால் கைப்பற்றப்பட்ட டிப்பர், பட்டா ரக வாகனம், 4 மோட்டர் சைக்கிள்கள், வாள்கள், கோடரிகள் உள்ளிட்ட சான்றுப் பொருட்கள் மன்றில் ஒப்படைக்கப்பட்டது
மேலும், சந்தேக நபர்களினதும், தேடப்படும் நபர்களினதும் வங்கிக் கணக்குகளை பரிசோதனை செய்ய நீதிமன்றத்திடம் குற்றப் புலானாய்வு திணைக்களத்தினர் அனுமதி பெற்றதுடன், அவர்கள் வெளிநாட்டு செல்ல தடை விதித்து அவர்களது கடவுச் சீட்டுக்களும் மன்றினால் முடக்கப்பட்டது.
பிரதான சந்தேக நபரான 6 ஆவது சந்தேக நபர் சிறைச்சாலையில் கைத்தொலைபேசி பாவித்துள்ளதுடன், 3292 அழைப்புக்களை மேற்கொண்டுள்ளதாகவும் மன்றுக்கு தெரியப்படுத்திய குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினர் அது தொடர்பில் விசாரணை செய்ய மன்றின் அனுமதியையும் பெற்றிருந்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினரின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மொடிஸ் ரஞ்சலமரகே அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக பொலிஸ் பரிசோதகர் இக்பால், பொலிஸ் சார்ஜன்ட் சந்தரூவான், பொலிஸ் கான்ஸ்டபிள் விஜயரட்ண மதுசங்க பண்டார ஆகியோர் தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது