இந்திய தூதரகத்தில் அமைந்துள்ள பல்லாண்டு கால பழைமை வாய்ந்த மலையக கல்வி அறக்கட்டளையை புதுப்பித்து நோக்கங்களை விரிவாக்கம் செய்யுங்கள். அதில் மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட அனைத்து இந்திய வம்சாவளி மலையக எம்பிகளையும், மலையக கல்வியியலாளர்களையும், சமூக முன்னோடிகளையும், மலையக கல்வி அபிவிருத்திக்காக பணியாற்றும் மன்றங்களையும் ஒன்றிணையுங்கள்.

இந்திய அரசாங்கம், இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்கள் தொடர்பான நலத்திட்டங்களுக்கு என பெயரிட்டு தர உறுதியளித்துள்ள இலங்கை ரூபாய் 300 கோடி நன்கொடை முழுவதையும், இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மலையக மக்களின் கல்வி வளர்ச்சிக்காக பயன்படுத்துங்கள். அதற்கு இந்த மலையக கல்வி அறக்கட்டளை, முன்னுரிமை திட்ட வகுப்பாளராக, கண்காணிப்பாளராக செயற்பட வேண்டும்.

 

இது தொடர்பில், நாம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனும் பேசி அதற்கான விசேட வாய்ப்பு, விதி முறைமைகளையும் பெற்று தருவோம் என இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாகலலேயிடம் தெரிவித்ததாக, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இந்திய தூதுவருடன் நிகழ்த்தப்பட்ட சந்திப்பில்,  மலையக, மக்களுக்கான இந்திய அரசின் நன்கொடை தொடர்பில் பேசப்பட்டவை பற்றி வினவியபோது, தமுகூ தலைவர் மனோ கணேசன் ஊடகவியலாளர்களிடம் கூறியதாவது,

இந்திய தூதரகத்தில் இலங்கை பெருந்தோட்ட தொழிலாளர் கல்வி அறக்கட்டளை இருக்கின்றது. அது இப்போது முறையாக செயற்படுவதில்லை. அதை புதுப்பியுங்கள். புலமை பரிசில்களை மட்டுமே வழங்கி வந்த அதன் செயலாற்றல் நோக்கங்களையும், வீச்சு வரையறையையும் விரிவாக்கம் செய்யுங்கள். அதன் பெயரையும் காலத்திற்கு ஏற்ப மாற்றுங்கள். கல்வி உதவி பெறுகின்ற மாணவர்களின் தகைமைகளையும், புலமை பரிசில் எண்ணிக்கையையும், தொகையையும் அதிகரியுங்கள்.

பிரதமர் மோடி உறுதியளித்த முன்னூறு கோடி நன்கொடையை மலையக கல்வி வளர்ச்சிக்காக பயன்படுத்துங்கள். இந்த அறக்கட்டளை இது தொடர்பில் இலங்கை அரசுடன் ஒத்துழைத்து செயற்பட வேண்டும். ஆனால், பின்தங்கிய நமது பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியின் முன்னுரிமை திட்ட வகுப்பாளராக, கண்காணிப்பாளராக கல்வி அறக்கட்டளைதான் செயற்பட வேண்டும். அந்நிதி யாருக்காக, எதற்காக வழங்கப்பட்டதோ, அந்த நோக்கங்களுக்காக மட்டுமே அது பயன்படுத்தப்பட வேண்டும்.

அறக்கட்டளையின் செயலாற்றல் நோக்கங்களின் மூலம் மலையக கல்வி, தொழில் பயிற்சி விவகாரங்களில் அக்கறை காட்டப்படவேண்டிய விடயங்கள் தொடர்பில் நாம் உங்களுக்கு ஏற்கனவே  தெரிவித்துள்ளோம்.

இன்றைய முன்னுரிமைப்படி, எமது சமூகத்திற்கு, விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம், தொழில்நுட்பம் ஆகிய பாடங்களில் விசேட பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தேவை. அல்லறும்  மலையக இளம் பெண்களுக்கான தாதியர் பயிற்சி கல்லூரி வேண்டும். இந்த கல்வி அறக்கட்டளை பண புலமைபரிசில் பெறுவோரின் எண்ணிக்கையும், வழங்கப்படும் தொகையும் அதிகரிக்கப்பட வேண்டும். பரிசில் பெறுகின்ற பெறுநர்களுக்கான வாழ்விட தகைமைகள் விரிவாக்கம் செய்யப்பட வேண்டும். அரச பல்கலைக்கழக வளாகம் ஆரம்பிக்கப்பட வேண்டும்.

எமது இந்த கோரிக்கைகளை செவிமடுத்த தூதுவர் கோபால் பாகலே, பேசப்பட்டதன் உள்ளக விடயங்களை, இம்மாத இறுதிக்குள் மீண்டும் சந்தித்து பேசுவோம் என்று எமக்கு உறுதி அளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *