உலக சாதனை பந்துவீச்சாளரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை படமான ‘800’ இல் இருந்து ‘தோட்டக்காட்டான்’ என்ற வசனத்தை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அத்திரைப்படத்தின் இயக்குநரான எம்.எஸ்.ஶ்ரீபதி தெரிவித்துள்ளார் என பிரபல ஊடகவியலாளர் சனத் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதவில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை அமைச்சரின் ஊடகப்பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
‘800’ படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியானது, இதில் நடிகர் நாசரால் ‘தோட்டக்காட்டான்’ என்ற வசனம் உச்சரிக்கப்படுகின்றது. இந்த சொல்லாடலுக்கு, வசனத்துக்கு மலையக தமிழர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு வலுத்தது. சமூகத்தை கொச்சைப்படுத்தும் வகையில் அமைந்துள்ள இந்த வசனம் நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது.
இந்நிலையில் ‘800’ முன்னோட்டத்தில் உள்ள இந்த வசனத்தை மாற்றியமைக்குமாறு மக்கள் சார்பில் படத்தின் இயக்குநரிடம் ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்தார்.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, ‘800’ திரைப்படத்தில் அந்த வசனம் நீக்கப்படும் என்ற உத்தரவாதம், எழுத்துமூலம் வழங்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.
அதேவேளை, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் உள்ளிட்டவர்களும் இந்த நாகரீகமற்ற சொற்பதத்துக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *