தங்கள் ஒரே மகனை கனடாவுக்கு கல்வி கற்பதற்காக இந்தியாவிலிருந்து அனுப்பிவைத்த பெற்றோருக்கு சொல்லொணா துயரத்தை ஏற்படுத்தும் செய்தி ஒன்று கிடைத்துள்ளது.
இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள Anand என்ற இடத்தைச் சேர்ந்த விஷய் பட்டேல் என்னும் இளைஞனை கனடாவில் கல்வி கற்பதற்காக அவனுடைய பெற்றோர் அனுப்பிவைத்துள்ளார்கள்.
மூன்று ஆண்டுகள் பட்டப்படிப்பு முடித்து, பட்டம் பெறவேண்டிய நேரத்தில், தற்கொலை செய்துகொண்டுள்ளார் விஷய் பட்டேல்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று, அதாவது, ஜூன் மாதம் 15ஆம் திகதி காரில் வெளியே சென்ற விஷய் பட்டேல் வீடு திரும்பவில்லை.
பொலிசார் அவரைத் தேடிவந்த நிலையில், 18ஆம் திகதி, ஆறு ஒன்றிலிருந்து அவரது உயிரற்ற உடல் மீட்கப்பட்டுள்ளது.
விஷய் பட்டேல் இம்மாதம் பட்டம் பெறவேண்டும். ஆனால், அவர் இறுதித் தேர்வில் சில பாடங்களில் தோல்வியடைந்ததால், அவரால் பட்டம் பெறமுடியாமல் போயிருக்கிறது.
ஆகவே, தன்னுடன் படித்தவர்கள் பட்டம் பெறும்போது, தன்னால் பட்டம் பெற முடியவில்லையே என்ற வருத்தத்தில் விஷய் பட்டேல் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
மகன் பட்டப்படிப்பு முடித்து கனடாவில் வேலைக்குச் செல்வான் என நம்பியிருந்த பெற்றோர், தற்போது மகனுடைய உடலை இந்தியாவுக்குக் கொண்டுவருவதற்காக கனடா செல்ல இருக்கிறார்கள்.