தமிழ் முற்போக்கு கூட்டணியால் எதிர்வரும் 12 ஆம் திகதி முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள நடை பயணத்தை ஒத்திவைக்குமாறு மலையக சமூக ஆய்வு மையத்தின் இணைப்பாளர் அருட் தந்தை மா.சத்திவேல் கோரிக்கை விடுத்துள்ளார்.

மலையகம் 200 என்பது மலைகத் தமிழர்களின் வரலாற்றுப் பயணத்தின் பெரிய அடையாளம்.இதனை வரலாறாக்கி வரலாறு படைக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் ஒவ்வொரு மலையத்தவருக்கும் உண்டு.அது ஒரு கூட்டு பொறுப்பு.அது ஒரு வரலாற்றுக் கடமை.வரலாற்றுக் கடமையுணர்வுடன் இதனை அடையாளப்படுத்தும் முகமாக நாம் நடத்தும் நிகழ்வுகள், செயற்பாடுகள் மலையக மக்களுக்கு பாதிப்பையோ அல்லது அவர்களுக்குள்பிரிவினையையோ ஏற்படுத்த இடம் அளிக்கக் கூடாது. வரலாற்றில் நீக்க முடியா கரையினை ஏற்படுத்தவும் இடம் அளிக்கக் கூடாது என்பது அனைவரின் விருப்பம் எதிர்பார்ப்புமாகும். இத்தகைய கூட்டு சமூக ஒழுக்க நெறியை சிவில் சமூக அமைப்புகளும், சமய அமைப்புகளும், அரசியல் கட்சிகளும்,
தொழிற்சங்கங்களும் தனித்தனியாகவும் கூட்டாகவும் நிறைவேற்ற வேண்டும்.

இந்த நன் நோக்கில் உள் நாட்டிலும், வெளிநாட்டிலும் மலையகம் 200 நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன.எனினும் மலையகத்தின் எதிர்பார்ப்புக்கு, தேவைக்கு,அரசியல் பாதுகாப்பிற்கு அதுபோல போதுமானதாக இல்லை. நிறைவானதாகவும் இல்லை.காரணம் நிகழ்வுகளின் திசை சுய இலாப பட்ட கணக்கில் உள்ளதோடு கவர்ச்சிகளுக்குள்ளும் சிக்கி உள்ளது என்றே தோன்றுகின்றது. இதனால் ஒவ்வொருவரும் தமக்கான திசையை தெரிந்து பயணிப்பது என்பது யானை தன் தலையில் மண்ணை அள்ளி கொட்டுவதற்கு சமமாகும்.மலையகத்தின் தலையில் மண்ணை அள்ளி கொட்டுவதற்கு மட்டும் இடமளிக்க முடியாது.

மலையகம் 200 அடையாளப்படுத்தி மன்னாரில் இருந்து மாத்தலை வரையுமான நடைபயணம் கடந்த 28 ஆம் தேதி ஆரம்பமாகி இனம், மொழி,சமயம் மற்றும் பிரதேசம் கடந்த மக்களிடம் ஆதரவோடு மாத்தளை நோக்கி பயணம் தொடர்கின்றது.மேலும் பல்வேறு தரப்புக்களும் ஆதரவு தருவதாகவும் பங்கு பற்றுவதாகவும் கூறியுள்ளனர். இது வரவேற்கத்தக்கதே. இதன் நிறைவு நாள் எதிர்வரும் 12ஆம் திகதி எதிர்வரும் சனிக்கிழமையாகும்.

ஆனால் அதே நாளில் நுவரெலியா-கற்றனை மையப்படுத்தி தமிழ் முற்போக்கு கூட்டணி நடை பயணத்தை திட்டமிட்டு இருப்பது அனைவரது முகத்தையும் சுளிக்க செய்துள்ளது. கீரை கடைக்கு எதிர் கடை என்பது போல ஒரு முதிர்ச்சி மிக்க தலைமைத்துவத்தைக் கொண்ட கட்சி போட்டியாக இன்னும் ஒரு நிகழ்வை ஆயத்தப்படுத்தி உள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏற்கனவே திட்டமிட்ட ஒன்று எனில் அது தவிர்க்க முடியாது. ஆனால் மன்னார் முதல் மாதா தளை வரையுமான நடைப்பயணம் ஆரம்பிக்கப்பட்டதன் இடை நடுவில் மலையகத்தில் தனது கட்சிக்கான ஆதரவை பெருக்கிக் கொள்ளவும்;கட்சித் தலைவர்களாகிய தங்களுக்கு தங்களுக்கு நட்சத்திர கௌரவத்தை அடையாளப்படுத்துவதற்கும் நிகழ்வை ஒழுங்கு செய்திருப்பது அரசியல் நாகரீகம் அல்ல என்பதுவே எமது கருத்தும் கவலையுமாகும்.

எனவே தமிழ் முற்போக்கு கூட்டணி மலையகத்திலும் , மலையகத்திற்கு வெளியிலும் மக்கள் ஆதரவையும் கௌரவத்தையும் தக்க வைத்துக் கொள்ள எதிர்வரும் 12 ஆம் திகதி நடாத்த திட்டமிட்டுள்ள நடை பயணத்தினை வேறொரு தினத்திற்கு ஒத்தி வைத்து மன்னார் முதல் மாத்தளை வரையிலுமான நடை பயணத்திற்கு தமது பூரண ஆதரவை நல்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

அத்தோடு தமிழ் முற்போக்கு முன்னணி மலையகத்தின் ஏனைய கட்சிகளையும், தொழிற்சங்கங்களையும் ஒன்றிணைத்து மத்திய மாகாணத்திலும் மலையக மக்கள் வாழும் ஏனைய மாகாணங்களிலும் நிகழ்வுகளை ஒழுங்கு செய்வதே சிறப்பாகும். தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவர்களில் ஒருவரான திரு. மனோ கணேசன் அவர்கள் “வடகிழக்கிற்கு வெளியே உள்ள தமிழர்களிற்கு நானே தலைவர்” என ஒரு முறை கூறியதாக ஞாபகம். அதனை தமிழ் முற்போக்கு முன்னணி கௌரவிக்கு முகமாகவும் ஒட்டுமொத்த தமிழர்களின் கவனத்தை மலையக மக்கள் பக்கம் குவிக்கவும் சிறப்பான நிகழ்வுகளை நிறைவேற்றுமாறு கேட்பதோடு; அதுவே கட்சிக்கான கௌரவம் எனவும் அடையாளப்படுத்த விரும்புகின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *