நாடாளுமன்ற சிறப்புரிமையை ஆட்சியாளர்கள் தங்களுக்கு தேவையான முறையில் பயன்படுத்துகிறார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், நாடாளுமன்றத்தைக் கூட அரசாங்கம் தமது தேவைக்காக பயன்படுத்துகின்றதா என்ற சந்தேகம் எமக்கு தற்போது எழுகின்றது. நாடாளுமன்ற சிறப்புரிமையை கூட இன்று ஆட்சியாளர்கள் தமது தேவைகளுக்காக பயன்படுத்துகின்றனர்.

அண்மைக்காலச் செயற்பாடுகளை அவதானித்தால் நாட்டின் நீதிமன்றங்களுக்கும் நாடாளுமன்றத்திற்கும் இடையில் குழப்பநிலையினை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி முயற்சிக்கின்றார் என்பது தெளிவாகத் தெரிகின்றது.

மேலும் தேர்தலுக்கான நிதியினை விடுவிக்காமல் தனது நிறைவேற்று அதிகாரத்தினைப் பயன்படுத்தித் தடுப்பது போன்ற விடயங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை மீறும் செயலாகும்.
எனவே இந்த விடயத்தில் ஜனாதிபதி தான் விரும்புகின்ற நேரத்தில் நாடாளுமன்றத்தில் இருக்கின்ற தனது கையாட்களை வைத்து சிறப்புரிமைகளை எழுப்பி இவ்வாறான குழப்பங்களை ஏற்படுத்துகின்றார்.
எனவே எதிர்காலத்தில் இவ்வாறான நிலைமைகள்; தொடர்பாக நாம் அவதானத்துடன் செயற்பட வேண்டும். அத்துடன் இலங்கையில் வரலாற்றினை முழுமையான ஆய்வுக்குட்படுத்துவதன் மூலம் பல்வேறு பிரச்சினைகளுக்கான தீர்வுகளை தீர்த்துக் கொள்ள முடியும்.

ஆனால் குறித்த ஆய்வுகள் முன்னெடுக்கப்படும்போது அது அரசியல் இலாபங்களுக்காகவோ அல்லது அரசியல் தலையீடுகளுடனோ முன்னெடுக்கப்படக் கூடாது.
ஏனெனில் இந்த விடயத்தில் சமூகங்களுக்கு இடையில் பல பிரச்சினைகளும் உருவாகக் கூடிய நிலைமையும் காணப்படும்.

எனவே இந்த விடயத்தில் நாம் தெளிவான ஒரு நிலைப்பாட்டினைக் கொண்டிருக்க வேண்டும்.
இந்த ஆய்வு குறித்த செயற்பாடுகளில் எமது நாட்டிலுள்ள துறைசார்ந்த நிபுணர்களையும் உள்வாங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *