திருப்பி அடியுங்கள். அது சட்ட வரம்புக்கு உட்பட்டதே! நான் பகிரங்கமாக இந்த கூற்றுக்கு பொறுப்பேற்கிறேன்!
-பெருந்தோட்ட மக்களுக்கு மனோ கணேசன் தெரிவித்துள்ளார்
வன்முறைக்கு எதிராக, தற்காப்புக்காக, திருப்பி தாக்க முடியும்.
அரசாங்கமும், சட்டமும் எங்களுக்கு பாதுகாப்பு தராவிட்டால் , எமது குடும்பத்தையும், சொத்தையும் பாதுகாக்க நாம் திருப்பி அடிக்க முடியும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
புதுக்குடியிருப்பு மத்திய வித்தியாலயத்தில் நடைபெற்ற, மலையகம்-200 நூல் வெளியீட்டு விழாவில் மாத்தளை மாவட்ட ரத்வத்தை தோட்டத்தில் தமிழ் தொழிலாளர் சொத்துகள் சேதப்படுத்தியமை தொடர்பில் கருத்து கூறிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
அதுதான் உங்களுக்கு புரிகின்ற பாஷை என்றால் அதை பேச நாம் தயார் என்பதை பொறுப்புடன் கூறி வைக்க விரும்புகிறேன்.
நீதியரசர் இளஞ்செழியன் தனது தீர்ப்பு ஒன்றில், தற்காப்புக்காக திருப்பி அடிக்கும் உரிமையின் சட்டவரம்பு பற்றி கூறியுள்ளார்.
அதையே நான் இங்கு பிரதிபலிக்கிறேன்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எம்மை பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறார்.
ஆனால், நாம் பலமுறை சொல்லியும், அவரது அரசு, எமது மக்களுக்கு எதிராக பெருந்தோட்ட நிர்வாகங்கள் நடத்தும் அராஜகங்களை கண்டும் காணாமல் இருக்கிறது.
ஆகவே பெருந்தோட்டங்களில் எமது மக்களின் இயல்பு வாழ்கைக்கு உத்தரவாதம் தராவிட்டால், தமிழ் முற்போக்கு கூட்டணி ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தையில் கலந்துக்கொள்ளும் முடிவை மறுபரிசீலனை செய்யும். என குறிப்பிட்டுள்ளார்.