அமெரிக்காவில் 84 ஆண்டுகளின் பின்னர் கலிபோர்னியா மாகாணத்தை தாக்கிய முதல் வெப்பமண்டல சூறாவளி, அம்மாநிலத்தில் வெள்ள பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.
ஹிலாரி சூறாவளி என பெயரிடப்பட்ட குறித்த புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட வெள்ளத்தால் தெற்கு கலிபோர்னியாவில் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூறாவளி மணிக்கு 119 கிலோமீட்டர் வேகத்தில், நேற்று மெக்சிகோவில் உள்ள பாஜா கலிபோர்னியா தீபகற்பத்தில் இருந்து கரையை கடந்தது.
மேலும், சூறாவளியால் மெக்சிகோவில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 5 பேர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், தென்மேற்கு அமெரிக்காவின் பெரும்பகுதிக்கு பேரழிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், தெற்கு கலிபோர்னியாவில் உள்ள ஓஜாய் நகருக்கு அருகே 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், இதனால் பொருள் சேதமோ, உயிர்சேதமோ ஏற்பட்டதாக எந்த தகவலையும் அந்நாட்டு ஊடகங்கள் வெளியிடவில்லை. இதனையடுத்து, கடற்கரைகளுக்குள் மக்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மெக்ஸிகோவில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிட்டத்தட்ட 19,000 மீட்பு வீரர்களை மெக்சிகன் அரசாங்கம் நிலைநிறுத்தியுள்ளது.