( நூரளை பி. எஸ். மணியம்)
கொரியா நாட்டின் “செமாவுல்” அறக்கட்டளை அமைப்பின் ஊடாக நுவரெலியா மாவட்ட செயலகம் இணைந்து சுயத்தொழிலில் பெண்களை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஆரம்பக்கட்ட நிகழ்வு நுவரெலியா சாந்திபுர,கலாபுர மற்றும் பம்பரக்கலை கிராமங்களில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பெண்கள் கிராமத் திட்டத்தின் கீழ் கொரியா நாட்டின் “கியாசாங்புக்டோ” மாநில அரசு மற்றும் “செமாவுல்” அமைப்பின் ஆதரவுடன் இவ் அமைப்பில் அங்கத்துவம் பெற்றுள்ள பெண்கள் சுயத்தொழிலில் நிலையான அபிவிருத்தி வளர்ச்சியை அடைய வேண்டும். என்ற அடிப்படையில் இத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியாவில் இவ் அபிவிருத்தி திட்டம் ஆரம்பிக்கும் ஆரம்ப நிகழ்வு சாந்திபுர பாடசாலையில் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் செயலாளர் யமுனா பெரேரா, நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட, “செமாவுல்” அறக்கட்டளையின் பணிப்பாளர் சோய் சுங் வோ மற்றும் உதவி அரசாங்க அதிபர் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் சாந்திபுர, பம்பரகலை, கலாபுர, ஆகிய கிராமங்களை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர். அதேவேளை இத்திட்டத்தில் மரக்கறி வகைகள், பழங்கள், ஸ்டோபெரி பழ செய்கை மற்றும் காலான் போன்ற உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளனர்.
இத் திட்டத்தின் ஊடாக நுவரெலியா பம்பரகலை, சாந்திபுர,கலாபுர ஆகிய மூன்று கிராமங்களை சேர்ந்த 2371 குடும்பங்களை சேர்ந்த 9686 நபர்கள் நன்மை அடையக்கூடிய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அபிவிருத்தியடைந்த புதிய கிராமங்களை உருவாக்கும் நோக்கில் “செமாவுல்” அமைப்பு இலங்கை உட்பட ஒன்பது நாடுகளில் இத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி யுள்ளதுடன், இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட இரண்டாவது திட்டமாக சாந்திபுரயில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கை மகளிர் பணியகத்துடன் இணைந்து அடுத்த ஐந்து வருடங்களில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப் படுவதாக “செமாவுல்” அமைப்பினர் தெரிவித்தார்கள்.
இவ் அபிவிருத்தி திட்டத்திற்கு கொரிய நாட்டைச் சேர்ந்த கியங்வூண் Kyungwoon பல்கலைக்கழக மாணவர்கள்,டேகு Daegu பல்கலைக்கழக மாணவர்கள், கிஹிங்னம் yeungnam பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இலங்கையை சேர்ந்த களனி பல்கலைக்கழக மாணவர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து இத் திட்டத்தை எதிர்காலத்தில் முன்னெடுக்க உள்ள தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் சிறுவர்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு மற்றும் நுவரெலியா மாவட்ட செயலகம் ஆகியவை ஒன்றிணைந்து இத் திட்டத்தை செயல்படுத்தவும் உள்ளனர்.”செமாவுல்” அறக்கட்டளை 1970 ஆம் ஆண்டில் கொரியாவில் உருவாக்கப்பட்ட அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.