எஸ்.எம்.எம்.முர்ஷித்

‘சிறுவர்களுக்கான பாதுகாப்புச்சூழலை உருவாக்குதல்’ என்ற தொணிப்பொருளில் இலங்கை மெதடிஸ்த திருச்சபை வாழைச்சேனை சேகரத்தினால் கனியேல் சிறுவர் அபிவிருத்தித்திட்டத்தின் மூலம் சிறுவர்களுக்கான பாதுகாப்புச் சூழ்நிலையை உருவாக்குவதற்கான அமைதிப்பேரணி வாழைச்சேனை பிரதேசத்தில் நடைபெற்றது.

பேரணியில் கலந்து கொண்டோர் ‘அன்பான தாய்மார்களே பிள்ளைகளைத் தவிக்க விட்டு வெளிநாடு செல்லாதீர்கள்’, ‘என்னை விட்டுப்போகாதே அம்மா’, ‘எங்களது பாதுகாப்பு உங்களது கைகளில்’ என்பன போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை கைகளில் ஏந்தியவாறு ஊர்வலமாக நடந்து சென்றனர்.

அமைதிப்பேரணியானது வாழைச்சேனை சுற்றுவளைவு மையப்பகுதியிலிருந்து ஆரம்பமாகி பிரதான வீதி வழியாக பேத்தாழை முருகன் ஆலயம் மற்றும் பேத்தழை விபுலானந்த கல்லூரியை அடைந்து அங்கு மாணவர்கள் பொதுமக்களிடையே விழிப்புணர்வு வீதி நாடகத்தினை நடாத்திய பின்னர் அங்கிருந்து மருதநகர் மெதடிஸ்த்த திருச்சபையினைச் சென்றடைந்தனர்.

தாய்மார்கள் சிறு பிள்ளைகளைக் கைவிட்டு வெளிநாடு செல்வதனால் உளரீதியாகப் பாதிக்கபடவதனை தவிர்க்குமுகமாக இவ்வமைதிப்பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில், அருட்திரு வே.உதயகுமார் ஊழியம் இலங்கோவன், கனியேல் சிறியோர் அபிவிருத்தித்திட்ட நிருவாகிகள் ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *