முஸ்லிம் விவாக, விவாகரத்துச்சட்டம் தொடர்பான இறுதி அறிக்கை நீதியமைச்சில் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் முன்னாள் ஆளுனர் அசாத் சாலி உள்ளிட்ட சுமார் 27 இஸ்லாமிய அமைப்புக்களின் பிரதிநிதிகள், பெண் பிரதிநிதிகள், சட்டத்தரணிகள், சிவில் சமூக தலைவர்கள் மற்றும் உலமாக்கள் எனப்பலரும் கந்து கொண்டனர்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் 18 பாராளுமன்ற உறுப்பினர்களின் மும்மொழிவுகளை உறுதிப்படுத்தும் வகையிலேயே குறித்த ஆவணங்கள் அமைந்திருந்தன.

இது பற்றி முன்னாள் ஆளுனர் அசாத் சாலி அவர்கள் நீதியமைச்சருடனான சந்திப்பில் கூறியதாவது,

இத்திருத்தத்தையே நாட்டின் முழு முஸ்லிம் சமூகமும் ஏற்றுள்ளது. தேவைப்பட்டால் எதிர்வரும் வெள்ளிக் கிழமைக்குள் ஒரு மில்லியன் கையெழுத்துக்களைப் பெற்றுத்தர முடியும்.

 

மேலும், முஸ்லிம் விவாக, விவாகரத்துச்சட்டம் இந்நாட்டு முஸ்லிம் மக்களினது உரிமையாகும். அது இம்மக்களின் விருப்பங்களுக்குட்பட்டவாறே திருத்தப்பட வேண்டும். அதனை எல்லோரும் விரும்பும் வகையில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் திருத்தியமைத்துள்ளது.

எனவே, அதனை முஸ்லிமல்லாதவர்கள் பலரும் திருத்தியமைக்க நினைப்பது ஆச்சரியமாகவுள்ளது. எனவே, இம்மும்மொழிவை தாங்கள் நீதியமைச்சராக இருக்கும் காலத்திலேயே நிறைவேற்றித்தர வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.

மேலும், சட்டத்தரணி நுஸ்ரா சறூக் அவர்கள்,

முஸ்லிம் விவாக, விவாகரத்துச்சட்டமானது முஸ்லிம் சமூகத்தின் சட்டமாகும். அதனை முஸ்லிம்கள் தான் கையாள வேண்டுமெனவும் அது பற்றிய திருத்தத்தில் எமது இக்கருத்துக்களுக்கு மாற்றுக் கருத்துடையவர்கள் ஒரு சிலர் மட்டுமே.

மேலும், பெண் காதி நீதிபதிகள் வெளிநாடுகளில் இருப்பதாக சிலர் கூறுகின்றனர். அதனை எமக்கு ஆதாரமாக எடுக்க முடியாது. நாம் ஷரீஆவை திருக்குர்ஆனையும் ஹதீஸையும் தான் பின்பற்றி இச்சட்டத்தை அமைக்கவும் மற்றும் திருத்தம் செய்யவும் வேண்டுமென்றும் தெரிவித்தார்.

பெண் காதி நீதிபதிகள் நியமனம் தொடர்பாக கருத்துதைத்த அல்-ஆலிமா டாக்டர் மரீனா தாஹா ரிபாய் அவர்கள்,

1400 ஆண்டுகளாக இஸ்லாமிய வரலாற்றில் எந்தவொரு பெண் நீதிபதிகளும் நியமிக்கப்படவில்லையெனவும் அது ஆழ்ந்த ஆய்வுகளுக்குட்படுத்தப்படவேண்டிய விடயமாகும்.

அத்துடன், காதிநீதிபதிகளின் மாதாந்த ஊதியம் ஒரு சிறிய தொகையாகும். எனவே, அது பற்றியும் நீதியமைச்சு கவனஞ்செலுத்தி சீரமைக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.

அஸ்கர் சமத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *