திருநெல்வேலி பா.ஜ., இளைஞரணி பொதுச்செயலாளர் ஜெகன் பாண்டியன்  நேற்று இரவு வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி மூளிகுளத்தை சேர்ந்தவர் ஜெகன் பாண்டியன்  வயது 34. திருமணமாகவில்லை நேற்றிரவு மூளிக்குளம் பாலம் அருகே இவரை நோக்கி வந்த கும்பலொன்று சரமாரியாக வெட்டி கொன்றுள்ளனர்.

இதனால் அந்த பகுதியே பதற்றமடைந்ததுள்ளது.கோயில் கொடை தொடர்பான பகையே கொலைக்கு காரணம் என பொலிஸார் கூறுகிறார்கள்.

அண்ணமாலை அறிக்கை

திருநெல்வேலி வடக்கு மாவட்ட பிஜேபி தமிழ்நாடு இளைஞரணி பொதுச் செயலாளர், சகோதரர் ஜெகன் பாண்டியன் அவர்கள், சமூக விரோதிகளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சகோதரர் குடும்பத்தினருக்கு, பிஜேபி தமிழ்நாடு என்றும் உறுதுணையாக இருக்கும் என்றும், குற்றவாளிகள் சட்டத்தின் மூலம் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்றும் உறுதியளிக்கிறேன்.

சகோதரர் ஜெகன் பாண்டியன் அவர்களின் அயராத மக்கள் பணியையும், அதைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் அவர் பெற்றுவரும் நன்மதிப்பையும் தாங்க முடியாத சமூக விரோதிகள், இந்த பாதகச் செயலில் ஈடுபட்டுள்ளனர். பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப்புக்கு நெருக்கமான மூளிகுளம் பிரபு என்ற திமுக நபரின் பெயர் காவல்துறையின் முதல் தகவலறிக்கையில் இடம்பெற்றுள்ளதாகவும், அவர் தற்போது தலைமறைவாக உள்ளதாகவும், அவரைக் காப்பாற்ற திமுக முயற்சி செய்வதாகவும் அறிகிறேன்.

குற்றவாளிகளை சட்டத்தின் பிடியிலிருந்து காப்பாற்ற திமுக முயலுமேயானால், அது நடக்காது என்பதை திமுகவினருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். வன்முறை வெறியாட்டங்கள் மூலம் பாஜகவினரை முடக்க நினைக்கும் திமுகவினர் முயற்சி பலிக்காது.

காவல்துறை, உண்மையான குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஆளுங்கட்சியினர் மிரட்டல்களுக்குப் பயந்து, குற்றவாளிகள் தப்பிக்க அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறேன். சட்டத்தின் பிடியிலிருந்து உண்மைக் குற்றவாளிகளை விடுவிக்க முயற்சி நடக்குமேயானால், அதைப் பார்த்துக் கொண்டு பிஜேபி தமிழ்நாடு சும்மா இருக்காது என்றும் எச்சரிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.என தமிழ்நாடு பிஜேபி தலைவர் கே.அண்ணாமலை தனது டூவிட்டரில் கூறி இருக்கிறார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *