(எஸ்.அஷ்ரப்கான்)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்றினை வலியுறுத்தி நாடு பூராகவும் நடைபயணமொன்றினை மேற்கொள்வதற்கு முஸ்லிம் அரசியல் கட்சிகள் முன்வர வேண்டுமென கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.

ஏறாவூர் பிரதேச இமாம்கள், முஅத்தீன்கள் மற்றும் ஆலிம்களுக்கு உலருணவுப்பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (10) ஏறாவூர் முஹைதீன் ஜூம்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கௌரவ அதிதியாகக்கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கன்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மை நிலையினைக் கண்டறியும் பொருட்டு, முஸ்லிம் அரசியல் கட்சிகள் அரசியல் வேற்றுமைகளைக் களைந்து ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும். அதற்காக நாடு பூராகவும் நடைபயணத்தை மேற்கொண்டு சர்வதேச விசாரணையொன்றினைக் கோர வேண்டும்.

முஸ்லிம் சமூகம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்த நாட்டைக் காட்டிக்கொடுத்த வரலாறு கிடையாது. ஏனைய சமூகங்களுடன் ஐக்கியமாகவும், ஒற்றுமையாகவும் வாழ்ந்து முன்னுதாரணமாகச் செயற்பட்ட சமூகம். இலங்கைத்திருநாட்டிலே கௌரவமாக தலைநிமிர்ந்து வாழ்ந்த முஸ்லிம் சமூகம். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தலைகுணிந்து வாழ வேண்டியதொரு துர்ப்பாக்கிய நிலைக்குள்ளானது.

முஸ்லிம் சமூகத்தோடு மிகவும் நெருக்கமாகவும், விசுவாசமாகவும் இருந்தவர்கள் கூட குறித்த தாக்குதலின் பின்னர் முஸ்லிம்களைத் தீவிவாதிகள், பயங்கரவாதிகள் போன்று சந்தேகக்கண்கொண்டு பார்க்கத்தொடங்கினர். நாட்டிலே இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் சீர்குலைந்து காணப்பட்டது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் யார் தொடர்புபட்டார்கள்? எவ்வாறு செய்தார்கள்? எதற்காகச் செய்தார்கள்? என்கின்ற விடயங்களெல்லாம் இன்று சனல் 4 வெளிட்ட காணொளியூடாக வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

இது சாதாரண விடயமல்ல. இன்று பேசுபொருளாக மாறியிருக்கின்ற குறித்த சதித்திட்டத்தின் உண்மை நிலையினை உலகறியச்செய்வதற்கு சகல தரப்பினரும் ஒன்றுபட்டுச் செயற்படுவது காலத்தின் தேவையாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.சுபைரின் வேண்டுகோளின் பேரில் அஸீஸா பவுண்டேஷன் ஏறாவூர் பிரதேசத்திலுள்ள இமாம்கள், முஅத்தீன்கள் மற்றும் ஆலிம்கள் என சுமார் 220 பேருக்கு இந்நிகழ்வின் போது உலருணவுப் பொதிகளை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் அஸீஸா பவுண்டேஷன் பணிப்பாளர் சாதிக் ஹசன், சட்டத்தரணி ஏ.எல்.நியாஸ், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஏ.பி.கபூர்தீன், சமூகச்செயற்பாட்டாளர் றிஸான் ஹாஜியார், உப பொலிஸ் பரிசோதகர் சரூக், ஜம்மிய்யதுல் உலமா சபை ஏறாவூர்க்கிளை தலைவர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *