” இது அரசியல் செய்யும் நேரம் அல்ல. நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டு, நாட்டு மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும். அதனை ஜனாதிபதி செய்து வருகின்றார். எனவே, மக்கள் நலன்கருதி அதற்கு நாம் முழு ஒத்துழைப்பையும் வழங்கி வருகின்றோம்.” – என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

அத்துடன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மொட்டு கட்சியினரின் கைக்கூலி அல்லர். தனது செயல்மூலமே அவர் அதனை நிரூபித்துவிட்டார் எனவும் அமைச்சர் ஜீவன் கூறினார்.

நுவரெலியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் அமைச்சரும், முன்னாள் எம்.பியுமான நவீன் திஸாநாயக்க, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், எம்.பியுமான எம்.ராமேஷ்வரன் ஆகியோர் உடனிருந்தார்கள்.

அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது,

” உள்ளாட்சிமன்ற தேர்தலால் நாட்டில் ஆட்சிமாறப்போவதில்லை. எனினும், மக்களுக்கு தமது உள்ளாட்சிமன்ற பிரதிநிதிகளை தெரிவுசெய்யக்கூடியதாக இருக்கும். நாட்டில் தற்போது சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்ளாட்சிமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். மக்களின் வரிப்பணத்தில்தான் அவர்களுக்கு சம்பளமும், சிறப்புரிமைகளும் வழங்கப்படுகின்றன. தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இதனை எப்படி நிர்வகிப்பது?

அதேபோல உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைத்தால் அது சிறுபான்மையின மக்களின் பிரதிநிதித்துவத்தில் தாக்கம் செலுத்தும்.

ஜனாதிபதி தேர்தல் ஒன்றின் ஊடாக நிலையான ஆட்சியை ஏற்படுத்தலாம். அவ்வாறானதொரு தேசிய மட்ட தேர்தலே ஏற்புடையதாக இருக்கும். பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் குட்டி தேர்தல் மேலும் சுமையாகவே அமையும். எது எப்படி இருந்தாலும் ஜனநாயக வழியில் நாம் தேர்தலை எதிர்கொள்வோம்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மொட்டு கட்சியின் கைக்கூலி என சிலர் விமர்சிக்கின்றனர். ஆனால் அவர் ஜனாதிபதியான கையோடு மொட்டு கட்சியின் ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்சவால் எடுக்கப்பட்ட சில தீர்மானங்களை இரத்து செய்தார். அவர் மொட்டு கட்சி கைக்கூலி என்றால் அப்படி செய்ய முடியுமா? நாடாளுமன்ற தேர்தல் ஊடாக – அரசமைப்பின் பிரகாரம் தெரிவான ஜனாதிபதி அவர் என்பதை நாம் ஏற்றாக வேண்டும்.

மலையக அரசியலில் இன்று சகோதரத்துவ உணர்வு உள்ளது. அந்த புரிந்துணர்வு இனி மாறாது. நாங்கள் இன்று அமைச்சராக இருக்கலாம். நாளை அவர்கள் அமைச்சராகலாம். அதேபோலதான் பிரதான கட்சிகளுடனும் எமக்கு புரிந்துணர்வு உள்ளது. மக்கள் பக்கம் நின்று, மக்களுக்கு நன்மை பயக்கும் தீர்மானங்களையே நாம் எடுப்போம்.” – என்றார்.

(க.கிஷாந்தன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *