பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் பாதையில் மோட்டார் சைக்கிளை ஓட்டி விபத்துக்குள்ளாகி தலைமறைவான பிரபல யூடியூபர்  டி.டி.எஃப்.வாசன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் பிணையில் வெளிவராத வகையில் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காஞ்சிப்புரம் பொலிஸார் கூறினர்.

பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், டி.டி.எஃப். வாசன் தனது மோட்டார் சைக்களில்  கோவை நோக்கி நேற்று முன்தினம் (17.9.2023) சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது வாகனம், காஞ்சிபுரம் அருகே உள்ள பாலுசெட்டி எனும் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, தனது வாகனத்தில் முன் சக்கரத்தை தூக்கி சாகசம் செய்ய முயற்சி செய்துள்ளார். அப்போது அவரது வாகனம் அவரது கட்டுப்பாட்டை மீறி சாலையில் சில அடி தூரம் தூக்கி வீசப்பட்டார். இதில், டி.டி.எஃப். வாசன் சாலையோரம் இருக்கும் புதரில் விழுந்து கிடந்துள்ளார். இந்த விபத்தைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள், அவரை மீட்டு, காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்குக் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்றும் தெரிவித்திருந்தனர். மேலும் அவருக்கு எலும்பு முறிவுக்குக் கையில் கட்டு போடப்பட்டது.

அதே சமயம் இந்த விபத்து தொடர்பான காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதையடுத்து டி.டி.எஃப் வாசன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை இயக்கியது. கவனக்குறைவாகச் செயல்படுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் டி.டி.எஃப் வாசன் மீது பாலுச்செட்டி சத்திரம் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர். டி.டி.எஃப். வாசனின் ஆபத்தான மற்றும் அதிவேகமான வாகன சாகசத்தினால், பல இளைஞர்கள் தவறாக வழி நடத்தப்படுகிறார்கள் என்ற விமர்சனமும் அவர் மீது உள்ளது. இந்நிலையில் டிடிஎஃப் வாசன்  காஞ்சிபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆயினும் தாம் சாகஸம் செய்யவில்லை தவறி விழுந்து விட்டேன் என வாசன் கூறி இருக்கிறார்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *