( வாஸ் கூஞ்ஞ)

இந்திய தமிழ் நாட்டு மக்கள் எங்களை தொப்புள் கொடி உறவுகள் என தெரிவித்துக் கொண்டு எங்கள் வாழ்வாதாரத்தை நசுக்குகின்றார்கள் என்றால் இதன் அருத்தம் என்ன? என மன்னார் மாவட்ட கடற்தொழில் பேரவைத் தலைவரும் , பள்ளிமுனை மீனவ சங்கத் தலைவரும் , மன்னார் தீவு பிரதேச சுங்கங்களின் சமாச பொருளாளருமான அந்தோனி எட்வேட் சில்வெஸ்ரர் றோச் இவ்வாறு தெரிவித்தார்.

புதன்கிழமை (20) மன்னார் ‘மெசிடோ’ நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது மன்னார் மாவட்ட கடற்தொழில் பேரவைத் தலைவரும் , பள்ளிமுனை மீனவ சங்கத் தலைவரும் , மன்னார் தீவு பிரதேச சுங்கங்களின் சமாச பொருளாளருமான அந்தோனி எட்வேட் சில்வெஸ்ரர் றோச் இங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்

இந்திய இலுவைப் படகுகள் மன்னார் வளைக் குடாவுக்குள் கடந்த நாற்பது வருடங்களாக இந்திய கடற் பரப்பைத் தாண்டி வந்து கொண்டு இருக்கின்றன.

இவர்கள் கச்சத்தீவு பரப்பு அன்டிய பரப்புக்குள்ளே வருவதாக தெரிவித்து மன்னார் கடற் பரப்புக்குள் வந்து விடத்தல்தீவு பகுதிக்குள் கரையில் இறங்கி தேனீர் குடித்து விட்டுச் செல்லும் நிலையும் காணப்படுகின்றது.

ஆனால் இலங்கையிலுள்ள முப்படைகளும் இதை கண்டும் காணாத நிலையில் இருப்பதும் நன்கு புலணாகின்றது.

இதை ஏன் இலங்கை பாதுகாப்பு படைகள் பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள் என்பது எமக்கு புரியாத புதிராக இருக்கின்றது.

ஆனால் நாங்கள் இலங்கை கடல் எல்லையைத் தாண்டி போக முடியாது. ஆனால் இந்திய மீனவர்கள் எவ்வாறு வருகின்றனர் என்பது ஒரு கேள்விக் குறியாகவே இருக்கின்றது.

இந்திய எல்லைக்குள் நாங்கள் சென்று விட்டால் நாங்கள் கைது செய்யப்பட்டு விடுதலையின்றி அங்கு சிறை வாசம் செய்யும் நிலையே காணப்படுகின்றது.

மன்னார் வளைக் குடாவில்தான் மீன்கள் உற்பத்தியாகும் பவளப் பாறைகள் காணப்படுகின்றது. ஆனால் இந்திய இலுவைப் படகுகள் இவற்றை அழித்துச் செல்லுகின்றன

இவ்வாறு இருக்க இலங்கை அரசு இவற்றில் கண் மூடித்தனமாக இருக்கின்றது? இது தொடர்பாக நாங்கள் பல தடவைகள் கடற் தொழில் திணைக்களம் , அரச அதிபர் , கடற்படையினர் மற்றும் கடற் தொழில் அமைச்சர்களிடம் முறையீடு செய்தாலும் இவர்கள் ஒருவரை ஒருவர் சாடிக் கொண்டு இதில் கவனம் செலுத்தாது இருக்கின்றனர்.

பாராளுமன்றத்தில் இது தொடர்பாக பேசப்பட்டும் அரசு கவனம் செலுத்தாது இருப்பதன் மர்மம் என்ன? இங்குள்ள மீனவர்களின் மீன்பிடி உபகரணங்களும் இந்திய இலுவைப் படகுகளின் வருகையால் அழியும் அபாயமும் ஏற்பட்டு வருகின்றன.

அரசு தொடர்ந்து இதற்கான தீர்வு எடுக்காவிடில் இங்குள்ள மக்களின் நிலை மாற்றம் அடையும் அபாயமும் தோன்றும்.

இந்திய தமிழ்நாடு மக்கள் எங்களை தொப்பில் கொடி உறவுகள் என பேசிக் கொண்டு இருக்கின்றார்கள். ஆனால் மன்னார் மீனவ சமூகம் எவ்வாறு பாதிப்பு அடைகின்றது என்பதை இவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஆகவே நாற்பது வருடங்களாக இந்த பிரச்சனை தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. இதை சுமூகமாக தீர்ப்பதற்கு இதுவரை எவரும் முன்வரவில்லை என்பதே எமது கவலையாக இருக்கின்றது.

இந்த விடயத்தில் மன்னார் மீனவர்கள் மட்டுமல்ல இலங்கையிலுள்ள அனைத்து மீனவர்களும் ஒன்றுபட்டு இதை தடை செய்ய முன்வர வேண்டும் என இவ்வாறு தெரிவித்தார்.

(வாஸ் கூஞ்ஞ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *