ஐந்து முறை திருச்சூர் சேலக்கரை சட்டமன்றத் தொகுதியிலிருந்து எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் கே.ராதாகிருஷ்ணன்.

கேரளாவில் CPI(M) கட்சியின் முக்கியத் தலைவர்களில் இவரும் ஒருவர். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இவர், பினராயி விஜயன் அமைச்சரவையில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராகவும், அறநிலையத்துறை அமைச்சராகவும் இருக்கிறார். பட்டியலின சமூகத்திலிருந்து வந்த ஒருவரையே அறநிலையத்துறை அமைச்சராக நியமித்த இந்த முடிவை புரட்சிகரமான மாற்றம் என மக்கள் அன்று பாராட்டினர்

ஆனால், தற்போது அவருக்கே கோயிலில் சாதிய பாகுபாடு நடந்திருக்கிறது என்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. கேரளாவில் கோயில் திறப்பு விழா ஒன்றுக்குச் சென்றபோது, கோயில் அர்ச்சகர்களிடமிருந்து சாதிய பாகுபாடு நேர்ந்ததாக அறநிலையத்துறை அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் கூறியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த ஞாயிறு அன்று, கோட்டயத்தில் நடைபெற்ற வேலன் சர்வீஸ் சொசைட்டி மாநில கூட்டத்தில், தனக்கு நேர்ந்த அந்த கசப்பான அனுபவத்தைப் பற்றிப் பேசிய அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன், “கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக ஒரு கோயில் திறப்பு விழாவுக்கு, அறநிலையத்துறை அமைச்சர் என்ற முறையில் நான் சென்றிருந்தேன்.

விழாவைத் தொடங்கிவைக்கும் வண்ணமாக, மேடையில் விளக்கு ஏற்றுவதற்கு அர்ச்சகர் ஒருவர் தீபத்தை எடுத்து வந்தார். என் கையில்தான் தீபத்தைத் தர வருகிறார் என்று நான் நினைத்தேன். ஆனால், அந்த தீபத்தை வைத்து அவரே விளக்கை ஏற்றினார். ஏதாவது மத நம்பிக்கையாக இருக்கும் என எண்ணி நான் ஒன்றும் கூறவில்லை. அதற்குப் பிறகு அவர், அந்த தீபத்தை சக அர்ச்சகரின் கையில் கொடுத்து, அவரையும் விளக்கை ஏற்றவைத்தார். அவர் விளக்கை ஏற்றிய பிறகு தீபத்தை எனக்குத் தரவில்லை. மாறாக தரையில் அதை வைத்தனர். தரையிலிருந்து அந்த தீபத்தை எடுத்து நான் விளக்கை ஏற்றுவேன் என அவர்கள் நினைத்தார்கள்.

 

தரையிலிருந்த அந்த தீபத்தை எடுத்து நான் விளக்கை ஏற்ற வேண்டுமாம். `போய் வேலையைப் பாருங்கள்’ எனக் கூறி அந்த விளக்கை ஏற்ற மறுத்தேன். சாதியின் பெயரில் தீபத்தைக் கையில்கூட தராமல் தரையில் வைத்த அந்தச் செயல் என்னை பாதித்தது. இதை எதிர்த்து அந்த மேடையிலே அர்ச்சகர்களுக்கு முன்னால் நான் பேசினேன். `நான் தரும் காணிக்கை பணத்தில் உங்களுக்கு எந்தவித தீண்டாமையும், பாகுபாடும் இல்லை. ஆனால், அதை தரும் என்னிடம் மட்டும் தீண்டாமையைக் கடைப்பிடிக்கிறீர்கள்.  ஆனால் காணிக்கைகளை எடுக்கும் போது அதை பார்க்காத நீங்கள் குறிப்பிட்ட சமூகத்திடம் சாதிய பாகுபாட்டுடன்தான் அணுகுகிறீர்கள்’ என நான் விமர்சித்தேன்” எனக் கூறினார்.

இவை நிறுத்தப்பட வேண்டும் என அவர் மன லேதனையுடன் சொன்னார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *