“மக்களுக்குச் சேவை செய்ய முடியாத அமைச்சுப் பதவியை நான் இப்போதைக்கு பொறுப்பெடுக்க மாட்டேன்” திகாம்பரம் எம்பி தெரிவிப்பு

 


“அமைச்சு பதவி மூலமாக மக்களுக்கு எவ்வாறு சேவை செய்ய வேண்டும் என்பதை நான் அமைச்சராக இருந்த காலத்தில் செய்து காட்டியுள்ளேன்” என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சர்ருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின்
மஸ்கெலியா பிரதேச தோட்டக் கமிட்டி தலைவர்களுக்காக மஸ்கெலியா ஸ்ரீ சண்முகநாதர் ஆலய பிரதான மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியபோது இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமாரும் உரையாற்றினர்.

மேலும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.பிலிப், நிதிச்செயலாளர்
சோ. ஸ்ரீதரன், பிரதி பொதுச் செயலாளர் ப.கல்யாணகுமார் ,தேசிய அமைப்பாளர் க. நகுலேஸ்வரன், உப தலைவர் கே.கணேசன் உட்பட காரியாலய உத்தியோகஸ்தர்கள், மஸ்கெலியா பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்கள், பிரதேச அமைப்பாளர்கள், இணைப்பாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பாராளுமன்ற உறுப்பினர் திகாம்பரம் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது:

எனது இருபது வருட மலையக அரசியல் வரலாற்றில் மாகாண சபை உறுப்பினராக பாராளுமன்ற உறுப்பினராக பிரதி அமைச்சராக அமைச்சராக படிப்படியாக பதவி நிலை பெற்று மக்களுக்கு ஏற்ற வகையில் சேவையாற்றி இருக்கிறேன். நல்லாட்சி காலத்தில் நான் ஏற்றுக் கொண்ட அமைச்சு பதவி மூலமாக மலையகத்தில் இதுவரை எவரும் செய்ய முடியாத அபிவிருத்தி திட்டங்களை செய்து காட்டினேன்.
அதனால் தான் மக்கள் இன்னும் அந்த அபிவிருத்தி திட்டங்களை நினைவு கூர்ந்து வருகின்றனர்.
அரசியல் காழ்ப்புணர்வோடு நான் என்றும் செயற்பட்டது கிடையாது.
மக்களைப் பிரித்தாளும் தந்திரம் என்னிடம் கிடையாது.
எனது அரசியலில் ஒவ்வொரு தீர்மானமும் மக்களின் மனம் அறிந்து தான் எடுக்கிறேன். தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சு பதவி ஒன்றைப் பொறுப்பு எடுக்குமாறு எனக்கு பலமுறை அழைப்பு வந்த போதும் நான் அதனை நிராகரித்து விட்டேன். அமைச்சுப் பதவி ஒன்றைப் பொறுப்பெடுத்தால் அந்த அமைச்சு பதவியின் ஊடாக மக்களுக்குச் சேவை செய்யக்கூடியதாக இருக்க வேண்டும். அவ்வாறு மக்களுக்கு சேவை செய்ய முடியாவிட்டால் அந்த அமைச்சுப் பதவியைப் பொறுப்பெடுப்பதில் எந்தப் பயனும் இல்லை.எனவே
எதிர்காலத்தில் வரும் புதிய அரசாங்கத்தில் நிச்சயமாக அமைச்சுப் பதவி ஒன்றைப் பெற்று மக்களுக்கு உரிய வகையில் சேவை செய்ய எதிர்பார்த்திருக்கிறேன். அதுவரை எனது மக்கள் பொறுமைக் காக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *