கடந்த செப்டெம்பர் மாதம் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் தமது முதலாவது மீளாய்வின் இறுதியில் வெளியிட்ட அறிக்கையின் பிரகாரம்,இலங்கையின் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்கத் தவறியதை ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் மட்டுமன்றி சர்வதேச நாணய நிதியமும் ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது.
நிலவி வரும் சூழ்நிலையின் பிரகாரம்,IMF நிபந்தனைகள் அமுல்படுத்தப்பட்ட ஏனைய நாடுகளில் நடந்தது போன்று அடுத்த வருடத்தின் முதல் காலாண்டில் இலங்கையிலும் “IMF Riots” ஏற்படும் என எதிர்பார்க்கலாம்.
2023 ஆம் ஆண்டை விட 2024 ஆம் ஆண்டில் அரச வரி வருவாயை 1.2 டிரில்லியன் ஆக திரட்டி வருமானம் ஈட்ட அரசாங்கம் எடுத்த நடவடிக்கையே இதற்கு காரணமாக அமையும்.அடுத்த வருடம் பல புதிய வரிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.மக்களின் அசையும் மற்றும் அசையா சொத்துகளுக்கு சொத்து வரியை (Property Tax ) அறிமுகப்படுத்த IMF பரிந்துரைத்துள்ளது. வீட்டின் சதுர அடி அல்லது இடம் அமைந்துள்ள பேர்ச்சஸ் அளவின் அடிப்படையில் வரி செலுத்த வேண்டும். ஒப்புப் பத்திரப் பதிவு எழுதும் போது செலுத்தப்படும் முத்திரைத் தீர்வைக்கு மேலான வருடாந்த வரியாக இது மாறும். வாகனம் இருந்தால்,அதற்கும் ஆண்டுதோறும் வரி செலுத்த வேண்டும்.இது புகைப் பரிசோதனை அல்லது வருடாந்த வருமான வரிக்கும் மேலதிகமான வரியாகும்.நீங்கள் ஒரு சொத்தை மரபுரிமையாகப் பெறும்போது அல்லது ஒரு சொத்தை கை மாற்றும்போது மரபுரிமை வரி(Inheritance Tax) விதிக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.இக் கண்ணோட்டத்தில் நோக்குமிடத்து,நீங்கள் திரும்பும் திசையில் எல்லாம் வரி விதிக்க அரசாங்கம் தயாராகி வருகிறது.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனையின் அடிப்படையிலயே ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தை தயாரித்துள்ளது. உண்மையில்,நிதியமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வதேச நாணய நிதியத்தால் தயாரிக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டை “தாளைப் பார்த்து வாசிப்பதை” மட்டுமே செய்வார்.
2023 இல் அரசாங்கத்தின் மொத்த எதிர்பார்க்கப்பட்ட வருமானம் 3,415 பில்லியன் ரூபாவாகும்.இதிலிருந்து 3,130 பில்லியன் ரூபா வரி அறவீட்டிலிருந்து கிடைக்கும் என அரசாங்கம் எதிர்பார்த்தது. இதற்கேற்ப,வரி சதவீதத்தை பெருமளவில் அதிகரிக்க அரசாங்கம் செயற்பட்டது.இவை அனைத்தும் IMF வழங்கிய இலக்குகளே. ஆனால் 2023 அரசாங்க வருமானம் 15% குறையும் (500 பில்லியன் ரூபா) என சமீபத்தில் IMF இன் முதல் மீளாய்வின் முடிவில் அதன் குழுத் தலைவர் பீட்டர் ப்ரூவர் தெரிவித்திருந்தார்.ஆனால் இதுவரை கிடைத்த தரவுகளின் பிரகாரம் இது சுமார் 900 பில்லியன் ரூபாவாக இருக்க வாய்ப்புள்ளது.இதன்படி பார்க்கும் போது அரசாங்கம் பொய்யான தரவுகளை சமர்ப்பித்து IMF-ஐ கூட தவறாக வழிநடத்தியதாகவே புலப்படுகிறது.
2024 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்ட மூலம்,நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவினால் கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.அதன் முன் விபரணங்களை பொறுத்தவரை,2023 ஐ விட 2024 இல் நெருக்கடி மிகவும் கடுமையானதாக இருக்கும் என நிரூபனமாகிறது.அதில் குறிப்பிடப்பட்டுள்ளதன் பிரகாரம் 2024ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் மொத்தச் செலவு 6,563 பில்லியன் ரூபாவாகும்.IMF கணிப்பீட்டின் பிரகாரம் 6,594 பில்லியன் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2023 உடன் ஒப்பிடும்போது இது 12% அதிகமாகும்.2024 ஆம் ஆண்டிற்கான அரசாங்க கடன் வட்டியே இதற்கான முக்கிய காரணமாகும்.
2024 ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் மொத்த மீள்செலவு (நாள் செலவு) 5,354 பில்லியன்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.இதில் கடன் வட்டியை செலுத்துவதற்காக மட்டும் 2,634 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இது மொத்த அரசாங்க செலவில் 49.23% ஆகும்.மீதமுள்ள 2,720 பில்லியன் அரச சம்பளம் மற்றும் ஊதியத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.IMF இலக்குகளின் பிரகாரம்,2024 ஆம் ஆண்டிற்கான எதிர்பார்க்கப்படும் வரி வருமானம் 4,154 பில்லியன் ரூபாவாகும்.இது 2023 உடன் ஒப்பிடும்போது 32.68% அதிகமாகும்.
அவ்வாறானால்,2024 இல் உங்கள் செலவுகளை இன்னும் இறுக்கிக் கொள்ள வேண்டியிருக்கும் என்பதை ஆரம்பத்திலேயே உணர்ந்து கொள்வது அவசியம் என்பதை சொல்லாமல் சொல்கின்றனர்.
https://publicfinance.lk/en/topics/highlights-from-the-appropriation-bill-for-2024-1696576924
இலங்கையில் கடன் நிலைத்தன்மையை அடைவதற்கு மூன்று விடயங்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் அரசாங்கத்திற்கு பரிந்துரைத்துள்ளது.
01) மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2022 இல் 128% ஆக இருந்த இலங்கையின் கடன் சுமையை 2027 இல் 95% ஆகக் குறைத்தல்,
02) 2022 இல் 34.6% ஆக இருந்த அரசாங்கத்தின் மொத்த நிதித் தேவைகளை 2027 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 13% சதவீதமாக குறைத்தல்,
03) 2022 இல் 9.4% ஆக இருந்த இலங்கையின் வெளிநாட்டுக் கடன் சேவையை (Foreign Debt Service) 2027 ஆம் ஆண்டளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 4.5% சதவீதமாக ஆகக் குறைத்தல்.
என்றாலும்,2023 இல் அரச வருமானம் 15% ஆல் குறைவடைந்துள்ளமையாலும்,
இலங்கையின் பொருளாதாரம் முதல் காலாண்டில் 11.5% ஆல் வீழ்ச்சியடைந்துள்ளமையினாலும், இரண்டாவது காலாண்டில் 3.1% வீழ்ச்சியைக் கருத்தில் கொண்டும் நோக்குமிடத்து,2024 ஆம் ஆண்டு பொருளாதார நிலைமை சீராகும் என நம்பிக்கை கொள்வது எதிர்பார்க்க முடியாத ஒரு விடயமாகும்.எனவே,உரிய காலக்கெடுவுக்குள் இந்த இலக்குகளை அடைவது சந்தேகமே.
https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/national_accounts_estimates_2023_q2.pdf
இதைத் தவிர,அதிகரித்து வரும் வறுமை, புத்திஜீவிகள் நாட்டை விட்டு வெளியேறுதல், சேவைத் துறையில் நிலவி வரும் மிக மந்தமான வளர்ச்சி மற்றும் 2024 வரவு செலவுத் திட்டத்தில் முன்னுரிமை ஒதுக்கீட்டைக் கருத்தில் கொண்டால், எதிர்காலத்தில் பொருளாதாரத்தில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைய முடியாது.
Sri Lanka’s defence, public admin, health get big appropriations for 2024
2023 இல்,நாட்டில் வறுமை 31% ஆக அதிகரித்துள்ளது.2019 இல் 3 மில்லியனாக இருந்த ஏழ்மையானோர் எண்ணிக்கை 2023 இல் 7 மில்லியனாக மூன்று ஆண்டுகளில் 4 மில்லியனாக அதிகரித்துள்ளன.2024 இல் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிப்பது தவிர்க்க முடியாது போகும்.இது அதிகரிக்கப்படும் வரிகள்,எரிபொருள்,நீர் மற்றும் மின்சாரம் கட்டண திருந்தங்களால் மேலும் பாதிக்கப்படும்.மிண் கட்டணத்தை மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை அதிகரிக்கவும்,2024 ஆம் ஆண்டு முதல் பெறுமானம் சேர் வரியை(VAT)
18% ஆல் அதிகரிக்கவும் 31.10.2023 ஆம் திகதி அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளமையும் கவனிக்கத்தக்கது.
வரி செலுத்தும் அல்லது வரி செலுத்துதலுக்கு உட்பட்ட உயர் மற்றும் நடுத்தர வருமானம் ஈட்டும் தொழில் வல்லுநர்கள் ஏறைக்குறைய ஒரு இலட்சம் பேரளவில் இதுவரை நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.மருத்துவர்கள்,
தாதியர்கள் மற்றும் பிற சுகாதாரப் பணியாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதால்,சுகாதார கட்டமைப்பு கணிசமாக முடங்கியுள்ளது.பல்கலைக்கழக பேராசிரியர்கள்,வங்கியாளர்கள் மற்றும் கணினி தொழில்நுட்ப வல்லுநர்கள் பெருமளவில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.2022 ஆம் ஆண்டில் ஒட்டு மொத்தமாக 1.1 மில்லியன் இலங்கையர்கள் வேலைவாய்ப்பு மற்றும் உயர் கல்விக்காக வெளிநாடு சென்றுள்ளனர்.இதன் மூலம் அரசாங்கத்திற்கு பெருமளவு வரி வருமான இழப்பு ஏற்படும்.
உற்பத்தி நிறுவனங்களின் சரிவு மற்றும் திறமையான தொழிலாளர்கள் இல்லாததால் தொழிற்சாலைகள் மூடப்படுவதால் வேலையின்மை 2022 உடன் ஒப்பிடும்போது 2023 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில்
5% -6% அதிகரித்துள்ளது.
https://www.themorning.lk/articles/rdXaOyuuM3c1H8PmyFLi
தொழில்நுட்ப முறைகளை பின்பற்றி மத்திய வங்கி பணவீக்கத்தை தனி இலக்கத்திற்கு குறைத்துள்ளது உண்மைதான்.ஆனால் அரசாங்கத்தின் தனி இலக்க விபரிப்பு உண்மையல்ல என்பதை எத்தனை பேர் புரிந்துகொள்கிறார்கள்? நாளாந்த நுகர்வுப் பொருட்களின் சந்தை விலைகளை நோக்குமிடத்து பணவீக்கத்தில் குறைப்பை காட்டுவதாக இல்லை.மக்கள் நுகரும் வீதம்,பொருட்களை வாங்கும் திறன் குறைவதும்,பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான தேவை குறைவதும் இதற்கு ஒரு காரணம் போலவே நுகராமை பணவீக்கத்தை மறைத்துள்ளது.தேவை குறைவதால் பொருட்கள் மற்றும் சேவைகளின் விநியோகம் குறைந்துள்ளது.எனவே, தற்போதுள்ள தேவையுடன் ஒப்பிடும்போது விலைகளின் அளவுகள் குறைவதற்கு எந்த காரணமும் இல்லை.உற்பத்திச் செலவு (Cost of Production) அதிகரிப்பால் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.
வட்டி விகிதங்களை மாற்றுவதன் மூலம் மத்திய வங்கியால் சந்தை தேவையை கட்டுப்படுத்துவதைக் கொண்டு பணவீக்கத்தை தனி இலக்க மதிப்பாக குறைக்க முடியும் என்றாலும்,விநியோகத்தை அவர்களால் கட்டுப்படுத்த முடியாது.
பகுப்பாய்வு ரீதியான நல நோக்குகள் இன்றி IMF பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தப் போன அர்ஜென்டினா மனிதப் பேரழிவை எதிர்கொண்டது.அர்ஜென்டினாவை படிப்பினையாகக் கொண்டே IMF பிரதானிகள் தங்கள் திட்டத்தில் சமூக பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க முடிவு செய்தனர்.அஸ்வெசும செயற்திட்டம் இந்த சமூக பாதுகாப்பு நலத்திட்டத்திற்கேற்பவே நடைமுறைப்படுத்தப்படுகிறது.ஆனால் மக்களின் அசௌகரியத்தைக் கட்டுப்படுத்த அறிமுகப்படுத்தப்பட்ட சீனி பூசிய கசப்பு மருந்து என்றே அஸ்வெசும திட்டத்தைச் சொல்ல வேண்டும்.
நீடித்த சமூக பாதுகாப்பு நலன் திட்டத்தை இந்த அரசாங்கம் “அஸ்வெசும” என்பதை காட்டி,குறுகிய காலத்திற்குள் முடிக்க எதிர்பார்த்துள்ளது.இலங்கையில் சர்வதேச நாணய நிதியத்தின் தோல்விக்கான அடிப்படை அறிகுறிகள் இப்போது தென்படுகின்றன.வறிய மக்கள் நீண்ட காலமாக பெற்று வந்த சமுர்த்தி கட்டமைப்பு இதன் மூலம் இல்லாதொழிக்கப்படுகிறது.
சர்வதேச நாணய நிதியத்தின் நான்கு வருட வேலைத்திட்டத்தின் முடிவில் இலங்கையும் ஏதோ ஒரு வகை மனிதப் பேரழிவை நோக்கித் தள்ளப்படுவதை புலப்பித்துக் காட்டுகிறது.
சர்வதேச நாணய நிதியத்துடனான கொடுக்கல் வாங்கல் இலங்கை போன்ற நாட்டிற்கு அவசியமான ஓர்
மூலம் என்றாலும்,உடன்பாடு எட்ட முன்னர் எமது தரப்பு சமூக பொருளாதார சந்தை வாய்ப்பு,வறியோர் பாதுகாப்பு,இலவச சேவைத் துறைகளுக்கான உத்தரவாதம் போன்றவற்றில் நியாயாதிக்கத்தை நிலைப்படுத்தி பாதகம் இல்லாது முன்கொண்டு சென்றிருக்க வேண்டும் என்பதே பொதுவான அவதானமாகும்.அரச வருமான இலக்கை எட்ட போலியான தரவுகளை வெளிகாட்டி மக்களை ஒடுக்கும் ஆட்சியும்,பொருளாதார நிர்வாக சீர்கேடுகளும் நடந்து வருகிறது.
ஊழியர் சேமலாப நிதியத்திற்கு ஏற்படுத்திய பாதிப்பை இன்னும் அதன் பயனாளர்கள் உணரவில்லை.Naomi Klein எழுதிய “Shock Doctrine”புத்தகத்தின் பிரகாரம் ஒரு நாட்டில் இதுபோன்ற பொருளாதார நெருக்கடி ஏற்படும் போது ஆட்சியாளர்கள் மக்களை சுயநினைவிழக்கச் செய்வது சகஜம்தான்.எனவே,இத்தகைய அதிர்வுகளை அவர்கள் உணர்வது சாத்தியமற்றது என குறிப்பிட்டது ஊழியர் சேமலாப பயனாளிக்கும் பொருந்தும்.
ஊழியர் சேமலாப நிதிக்கு அரசாங்கம் வழங்கிய “அடி” மிகவும் சக்தி வாய்ந்தது.2038 வரையிலான 15 ஆண்டுகளில் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பின் கீழ் நிதியத்திற்குச் செலுத்த வேண்டிய 3.5 டிரில்லியன் ரூபாவிற்கும் மேல் இழக்கப்பட்டுள்ளது.3.5 டிரில்லியன் ரூபா என்பது இன்றைய நாணய மாற்று விகிதத்தில் 10.6 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்குச் சமமாகும்.ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்களே செலவாகியது.இவ்வாறு 10 துறைமுகங்கள் நிர்மாணிக்க முடியுமான நிதியை அரசாங்கம் ஊழியர் சேமலாப நிதியிலிருந்து கையகப்படுத்தியுள்ளது.
இதற்கேற்ப 19 வகைப்பாடுகளின் கீழ் 127 அரச நிறுவனங்கள் மறுசீரமைப்பு (விற்பனை) செய்ய பட்டியலிடப்பட்டுள்ளன. (தொடர்புடைய பட்டியலை கீழ் உள்ள இணைப்பை பார்ப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.)
https://www.treasury.gov.lk/web/department-of-public-enterprises-links-list-of-public-enterprises/section/banking-finance
இந்நிறுவனங்களில்,அரசாங்கத்திற்குச் சொந்தமான ஆறு (6) வங்கிகள் உட்பட ஒன்பது (9) நிதி நிறுவனங்கள்,இந்நாட்களில் மறுசீரமைப்புக்குத் தேவையான ஆரம்பப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.சுரேஷ் ஷா அவர்களது தலைமையில் இதற்கென தனி நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது.வங்கிகளில் அரசுக்கு சொந்தமான பங்குகள் விரைவில் விற்கப்படலாம்.இவற்றை வாங்குபவர்கள், உள்நாட்டிலும் சரி,வெளிநாட்டிலும் சரி, அவர்கள் தங்களுக்கு ஏற்றவாறு நிதிச் சந்தைகளைக் கையாளுவார்கள்.
(கீழ் காணும் இணைப்பில் மறுசீரமைப்புக்காக நியமிக்கப்பட்ட குழுவினரை பார்க்கலாம்.)
https://www.treasury.gov.lk/web/sru/section/team
மக்கள் வங்கி,இலங்கை வங்கி,தேசிய சேமிப்பு வங்கி,அரச அடமானம் மற்றும் முதலீட்டு வங்கி,இலங்கை வீடமைப்பு அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபன வங்கி,லங்கா புத்ரா அபிவிருத்தி வங்கி,பிராந்திய அபிவிருத்தி வங்கி, இலங்கை சேமிப்பு வங்கி மற்றும் ஊழியர் சேமலாப நிதியம் (ETF) அனைத்தும் வங்கியின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளன.
ஏற்கனவே பல (7) நிறுவனங்களுக்கு EOI கள் அழைக்கப்பட்டு பரிவர்த்தனை ஆலோசனை நிறுவனங்கள் கூட நியமிக்கப்பட்டுள்ளன.
(கீழ் காணும் இணைப்பில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் விவரங்களைப் பார்க்கலாம்)
https://www.treasury.gov.lk/api/file/4de1c2f4-dd51-495e-aafb-fc41ff5ad8b8
அண்மையில் வெளியான சண்டே டைம்ஸ் பத்தி மற்றுமொரு தகவலை வெளியிட்டிருந்தது.”மேற்கண்ட ஆறு வங்கிகளும் விரைவான மறுசீரமைப்புக்கு உட்படுத்தப்படுவதற்குக் காரணம்,மோசமான கடன்கள்(Bad loans),மூலதன நிலை மீதான அழுத்தம்(Pressure on capital position),மற்றும் குறித்த வங்கிகளின் பணப்புழக்க அளவுகள் மோசமடைந்திருப்பது என சுட்டிக்காட்டியிருந்தது.
IMF ஆல் சமீபத்தில் நடத்தப்பட்ட நிதி நிறுவனங்களின் பகுப்பாய்வு (State Bank (Diagnostic Analysis),அரசாங்கத்தால் வங்கிகள் மூலம் தனியார் துறைக்கு வழங்கும் கடன் சலுகைகள் (Debt Moratoriums),கடன் மறுசீரமைப்பு காரணமாக ஏற்படும் பாதிப்பைத் தணிக்க 1.4 டிரில்லியன் ரூபா மூலதன பாய்ச்சல் உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்று அதிகாரிகளை மேற்கோள் காட்டி பத்திரிகை கூறுகிறது.
(குறித்த செய்தியை வாசிக்க)
https://www.sundaytimes.lk/231015/business-times/six-state-owned-banks-to-undergo-urgent-reforms-535667.html
எனவே,இவ்வாறு நோக்குமிடத்து அடுத்த ஆண்டிலும் பொருளாதார சுமைகளால் நாட்டு மக்கள் பாதிக்கப்படுவார் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவது முதன்மை முன்னுரிமை அம்சமாகும் என்பது போலவே,நாட்டு மக்களின் வாழ்வுரிமையை,பெருளாதர உரிமையை உறுதி செய்வதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
ஏ.ஜி.நளீர் அஹமட்
முன்னாள் ஆய்வாளர்-சர்வதேச உறவுகள் மற்றும் மூலோபாய கற்கைகளுக்கான லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவகம்.