75ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள், “நமோ நமோ தாயே நூற்றாண்டுக்கான முதற்படி” எனும் தொனிப்பொருளின் கீழ் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரின் தலைமையில் இன்று (04) முற்பகல் காலிமுகத்திடலில் நடைபெற்றது.
மிகக் குறைந்தச் செலவில் பெருமைக் கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வின் பிரதான நோக்கம் இலங்கையர்களின் பெருமையை மீண்டும் உலகுக்கு வெளிக்காட்டுவதாகும்.
ஜனாதிபதியின் வருகையைக் குறிக்கும் வகையில் இலங்கை இராணுவத்தினர் இசைவாத்தியங்களை இசைத்த பின்னர், பாதுகாப்பு படைகளின் பிரதானி, முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரால் ஜனாதிபதி, விழா நடைபெறும் மைதானத்தின் கொடிக் கம்பம் அருகே அழைத்து வரப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து பாரம்பரிய மேள வாத்திய இசைக்கு மத்தியில் ஜனாதிபதியால் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து விழா நிகழ்வுகள் ஆரம்பமாகின.
ஜனாதிபதி விசேட மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டதை தொடர்ந்து 105 பாடசாலை மாணவர்கள் தேசிய கீதத்தை பாடினர். அதனை தொடர்ந்து பாடசாலை மாணவிகள் ஜெயமங்கல கீதம் மற்றும் ‘தேவோ வஸ்ஸது காலேன’ கீதம் என்பவற்றை பாடினர்.
இலங்கையின் சுதந்திரம், இறையாண்மை மற்றும் ஆட்புல ஒருமைப்பாட்டிற்காக உயிர் தியாகம் செய்த அனைத்து இலங்கையர்களையும் நினைவுகூரும் வகையில் 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஜனாதிபதிக்கு மரியாதைச் செலுத்தும் முகமாக 21 பீரங்கி வேட்டுக்கள் தீர்த்து வைக்கப்பட்டன.
இலங்கை இறையாண்மையுள்ள நாடு என்பதை உலகுக்கு எடுத்துக்காட்டும் வகையில் இந்த 75ஆவது சுதந்திர தின விழாவை முப்படை, பொலிஸ், மற்றும் சிவில் பாதுகாப்புப் படையணிகளின் அணிவகுப்புகள் அலங்கரித்தன.
இலங்கை தேசத்தின் வலிமையையும் பெருந்தன்மையையும் வெளிப்படுத்தும் வகையில் இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தைச் சேர்ந்த 100 பேர் தேசிய கொடியை ஏந்தியவாறு அணிவகுத்துச் சென்றனர்.
முப்படைகளின் கவச வாகனங்களும் இதில் இணைந்திருந்ததோடு ஆயுதப் படைப்பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அணிவகுப்புகள் மற்றும் 21 ஓய்வுபெற்ற அதிகாரிகள் மற்றும் 29 ஊனமுற்ற அதிகாரிகளும் ஊர்வலத்தில் பயணம் செய்தனர்.
முப்படை அணிவகுப்புகள் மற்றும் இசைக்குழு அணிவகுப்புகளும் அதில் அங்கம் வகித்தன.
அத்துடன் இலங்கையின் வான் பலத்தை வெளிப்படுத்தும் வகையில், கபீர் விமானங்கள் உள்ளிட்ட இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான விமானங்களின் சாகசங்கள் நிகழ்வை அலங்கரித்ததுடன், இலங்கையின் கடற் பலமும் பெருமையுடன் காட்சிப்படுத்தப்பட்டன. பராசூட் நிகழ்ச்சிகளும் விழாவுக்கு வர்ணம் சேர்த்தன.
மகா சங்கரத்தினர் மற்றும் ஏனைய மத தலைவர்கள், பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன, அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், ஆளுநர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், 75ஆவது சுதந்திர தின நிகழ்வில் பங்கெடுப்பதற்காக இலங்கை வந்துள்ள பல்வேறு நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் தலைமையிலான தூதுக்குழுவினர், தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர், பிரதமரின் செயலாளர், அமைச்சரவை செயலாளர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட ஏனைய அமைச்சுக்களின் செயலாளர்கள், பாதுகாப்பு படைகளின் பிரதானி, முப்படைத்தளபதிகள், பொலிஸ் மா அதிபர், சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பு பிரதானிகள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் படை வீர்ரகள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வை நேபாள வெளிவிவகார அமைச்சின் பிரதிநிதியான கலாநிதி பிமலா ராய் போடியல், ஜப்பானின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் டக்கே சுன்சூக்கி, பூட்டானின் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சர் ஜாய் பிர் ராய், மாலைதீவுக்கான வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா சஹீட், பங்களாதேஷின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எ.கே அப்துல் மொமன், பாகிஸ்தானின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் திருமதி.ஹினா றபானி கார், இந்திய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வி.முரளிதரன், பொதுநலவாய செயலாளர் நாயகம் பெட்றீசியா ஸ்கொட்லன்ட் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.