இந்த ஒப்பந்தமானது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐ.நாவின் முன்னாள் செயலாளர் நாயகமும் பொதுச்சபையின் தலைவரும் உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனச் சபையின் தலைவருமான பான் கி மூன் ஆகியோர் முன்னிலையில் இன்று (07) பிற்பகல் கைச்சாத்திடப்பட்டது.
அரசாங்கமும் GGGIயும் பசுமை வளர்ச்சி தொடர்பான முயற்சிகள் குறித்த திட்டங்களை திறம்பட வடிவமைப்பதற்கு ஏதுவாக இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இந்த ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கம் சார்பில் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் டொக்டர் அனில் ஜாசிங்கவும் GGGI சார்பாக அதன் பணிப்பாளர் நாயகம் பிராங் றிஜ்ஸ்பெர்மன் (Frank Rijsberman ) ஆகியோரும் கைச்சாத்திட்டனர்.
GGGIயின் உறுப்பினராக இலங்கை 2019 ஆம் ஆண்டு இணைந்து கொண்டது. வளரும் நாடுகள் மற்றும் வளர்ந்து வரும் நாடுகளில் வலுவான மற்றும் நிலைபேண்தகு பொருளாதார வளர்ச்சியை ஆதரிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் GGGI தன்னை அர்ப்பணித்துள்ளது.
குறைந்தளவு காபனைக் கொண்ட பசுமைப் பொருளாதாரத்தை நோக்கி தமது உறுப்பினர்கள் மாற்றமடைவதை ஊக்குவிக்கும் வகையில் கொள்கை ஆலோசனைகள், பசுமை திட்டங்களின் அபிவிருத்திக்கு அவசியமான தொழில்நுட்ப உதவி, கொள்கைகள் மற்றும் ஒழுக்க விதிகள், பசுமை வளர்ச்சி செயற்திட்டங்களை அமுல்படுத்தல், அறிவை பகிர்ந்து கொள்ளல், பசுமை முதலீடுகளை திரட்டுதல் உள்ளிட்ட பசுமை வளர்ச்சியுடன் தொடர்புபட்ட பல விடயங்களை GGGI முன்னெடுக்கின்றது.
இலங்கைக்கான கொரிய தூதுவர் சந்துஷ் வூன்ஜின் ஜியொங், சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜயவர்தன, ஜனாதிபதியின் ஆலோசகர் ஆனந்த மலவிதந்திரி, GGGI பிரதிநிதிகள் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.