கச்சதீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இனிதே நிறைவுபெற்றது.
யாழ்ப்பாணம் – நெடுந்தீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட கச்சதீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழா நேற்று பிற்பகல் 4 மணிக்கு கொடியேற்றத்தோடு ஆரம்பமானது.
தொடர்ந்து நேற்று இரவு விசேட ஆராதனை இடம்பெற்று சுற்றுப்பிரகாரமும் இடம்பெற்றது.
திருவிழாவின் இரண்டாவது நாளான இன்று காலை 6 மணிக்கு திருச்செபமாலை இடம்பெற்று, 6.30 ஆயர் மற்றும் அருட்தந்தையர்கள் வரவேற்கப்பட்டு 7 மணிக்கு திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இன்றைய திருவிழா திருப்பலி கொழும்பு மறை மாவட்டத்தின் துணை ஆயர் அருட்தந்தை அண்ரன் தில்லைநாயகம் மற்றும் யாழ் மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ப.யோ.ஜெபரட்ணம் அடிகளார் தலைமையில் இடம்பெற்றது.
இவ்வருடம் கச்சதீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழாவில் 2800 இலங்கை பக்தர்களும், 2100 இந்திய பக்கர்களும் கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த வருட திருவிழாவில் மட்டுப்படுத்தப்பட்டவர்களே அனுமதிகப்பட்டிருந்தால் இவ்வருடத்திற்கான திருவிழாவில் அதிகளவான பக்தர்கள் ஆர்வத்தோடு கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது