சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங்கின் மூன்றாவது பதவிக்காலத்தின்போது, சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பு, மேலும் வலுவடைந்து, இரு நாட்டு மக்களுக்கும் நன்மை பயக்கும் எதிர்காலம் உருவாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஷி ஜின்பிங்கின் அனுபவமிக்க தலைமையின் கீழ், சீனா பல சவால்களை வெற்றிகொண்டு, பாரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்று தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், அவரின் மூன்றாவது பதவிக்காலத்தில் சீனா நிச்சயமாக ஒரு புதிய பரிமாணத்திற்கான பாதையில் பயணிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
சீன மக்கள் குடியரசின் ஜனாதிபதியாக மூன்றாவது தடவையாகவும் தெரிவு செய்யப்பட்ட ஷி ஜின்பிங்கிற்கு வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சீன ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில்,
“மக்கள் சீனக் குடியரசின் ஜனாதிபதியாக மூன்றாவது முறையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்காக இலங்கை அரசாங்கத்தினதும் மக்களினதும் அன்பான வாழ்த்துக்களை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்களின் அனுபவம் வாய்ந்த தலைமையின் கீழ், சீனா பல சவால்களை வெற்றிகொண்டு மிகப்பாரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது. உங்களது மூன்றாவது ஜனாதிபதி பதவிக்காலம் சீனாவிற்கு ஒரு புதிய பரிமாணத்திற்கான வழியை நிச்சயமாகத் திறக்கும் என்று நான் நம்புகிறேன்.
இலங்கையும் சீனாவும் பல நூற்றாண்டுகளாக பரஸ்பர புரிந்துணர்வின் அடிப்படையில் சிறப்பான நட்புறவைப் பேணி வருகின்றன.
சர்வதேச நாணய நிதியச் செயற்பாடுகள் உட்பட, குறிப்பாக இலங்கையின் தற்போதைய பொருளாதார சவால்களை, வெற்றிகொள்வதில் சீன அரசாங்கம் வழங்கும் உறுதியான ஆதரவை நான் மிகவும் பாராட்டுகின்றேன்.
உங்களது மூன்றாவது ஆட்சிக் காலத்தில், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு தொடர்ந்து வலுப்பெற்று, இரு நாட்டு மக்களுக்கும் நன்மைகளைப் பெற்றுத் தரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
அதிமேதகு ஜனாதிபதி அவர்களே, சீன மக்கள் குடியரசின் நட்புறவைக்கொண்ட மக்களுக்கு சுபீட்சம் பெறவும் மற்றும் நீங்கள் மூன்றாவது முறையாக பதவியேற்றதற்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கின்றேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.