எந்தவொரு குழுவினரும் பாடசாலை மாணவர்களை பணயக் கைதிகளாக பயன்படுத்த இடமளிக்கபோவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கல்வி மற்றும் உயர்கல்வி, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுக்களின் 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட யோசனைகள் தொடர்பிலான பகுப்பாய்வுக் கூட்டம் இன்று (19) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பரீட்சைப் பணிகளை அத்தியாவசிய செயற்பாடுகளாக முன்னெடுத்துச் செல்வதற்கு அவசியான சட்ட ஏற்பாடுகளை ஏற்படுத்த எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, கடந்த வருடம் பரீட்சை விடைத்தாள்களைத் திருத்தும் பணிகளில் ஈடுபட்ட குழுவினரை, கொண்டு இம்முறை விடைத் தாள்களைத் திருத்தும் பணிகளை முன்னெடுக்குமாறும் பணிப்புரை விடுத்தார்.

உயர்தர பரீட்சை விடைத்தாள்களைத் திருத்தும் பணிகளுக்கான மாற்று யோசனைகள் மற்றும் உரிய வேலைத்திட்டங்களை இவ்வார இறுதிக்குள் அறிவிக்குமாறு அறிவுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பரீட்சைகள் தொடர்பிலான பணிகளை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தத் தேவையான பணிகளை முன்னெடுக்குமாறும் கல்வி துறைசார் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

இப்பணிகளில் ஈடுபட மறுப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இது தொடர்பில் சட்டமா அதிபருடன் கலந்தாலோசிக்க உள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கல்வி அமைச்சர் இது தொடர்பில் அறிவித்துள்ள விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்து அதற்குரிய அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் கல்வித் துறைசார் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி வலியுறுத்தினார்.

கல்வி மற்றும் உயர்கல்வி, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுக்களின் 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட விஷேட யோசனைகளின் முன்னேற்றங்கள் குறித்தும் இதன்போது பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சையில் அதிக மதிப்பெண்களை பெற்றுக்கொள்ளும் மாணவர்களில் குறைந்தபட்சம் வருடத்திற்கு நால்வரையேனும் ஒக்ஸ்போர்ட், கேம்பிரிஜ் மற்றும் ஹார்வட் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்றைத் தயாரிப்பது தொடர்பில் ஆலோசனைகளை வழங்கிய ஜனாதிபதி, வருடாந்தம் மாணவர் எண்ணிக்கையில் அதிகரிப்பை ஏற்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அறிவுறுத்தினார்.

அரச பல்கலைக்கழகங்களைப் போன்றே தனியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் அவ்வாறான வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுக்கும் அதேநேரம், தொழில்நுட்ப கல்வியில் மாணவர்களை அதிகளவில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

உயர் கல்வி மற்றும் சாதாரண தர கல்வி வசதிகள் கொண்ட சகல பாடசாலைகளுக்கு, இணைய வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கான வேலைத்திட்டமொன்றை முன்மொழியுமாறு தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அதேபோல் வருடாந்தம் 10,000 பொறியியல் பட்டதாரிகளையும் 5,000 மருத்துவ பட்டதாரிகளையும் உருவாக்குவதற்கான வேலைத்திட்டமொன்றை அரசாங்க மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் இணைந்து முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்திய ஜனாதிபதி அதற்குரிய குழுவொன்றை நியமித்து அறிக்கையொன்றை சமர்பிக்குமாறும் அறிவுறுத்தினார்.

மேலும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் 350இற்கும் மேற்பட்ட தொழில்நுட்ப மற்றும் தொழில் பயிற்சி கல்லூரிகளை ஒன்றிணைத்து வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

நடைமுறையிலிருக்கும் தொழிலாளர் சட்டம் தொழிலாளர்களுக்கு அவசியமான பல்வேறு மூலங்களை கொண்டுள்ளதால், அதற்கு மாறான தனிப்பட்ட தொழில்முறைச் சட்டம் (Unified Labor Law) ஒன்றை உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்த ஜனாதிபதி, அதற்கு அவசியமான சட்டமூலத்தை மே மாதத்திற்குள் சமர்பிக்குமாறு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

எம்.எல்.ஏ.ஏம் ஹிஸ்புல்லாவினால் ஆரம்பிக்கப்பட்ட கிழக்கு தனியார் பல்கலைக்கழகம் தொடர்பில் ஆராய்வதற்கு இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொலவின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள உப குழுவின் நடவடிக்கைள் குறித்தும் இங்கு ஆராயப்பட்டது.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பொருளாதார அலுவல்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆலோசகர் பேராசிரியர் ஆர்.எச்.எஸ்.சமரதுங்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, கல்வி அமைச்சின் செயலாளர் எம்.என்.ரணசிங்க, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளர் ஆர்.பீ.ஏ.விமலவீர, சுற்றாடல் அமைச்சின் செயலாளர் விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க உள்ளிட்ட அதிகாரிகளும் அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *