2019 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத் தின் காலப்பகுதியில் இரண்டாம் மொழி ஆசிரியர்களாக நியமனம் வழங்குவதற்கு தெரிவு செய்யப்பட்ட 1200 பேருக்கு உடனடியாக நியமனங்களை பெற்றுக்கொ டுப்பதற்கு ஆக்கபூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டு அது தொடர்பான அறிக்கையை விரைவாக சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமர் தினேஸ் குணவர்தனவை அறிவுறுத்தியுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற ஆளும்தரப்பு கூட்டத்தின்போது இவ்விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்தை ஈர்த்திருந்தேன்.
இதனையடுத்தே ஜனாதிபதி மேற்கண்டவாறு பிரதமரை அறிவுறுத்தினார் என்றும் குறிப்பிட்டார்.
இது இவ்வாறிருக்க இரண்டாம்மொழி ஆசிரியர்களுக்கான நியமனங்கள் மிகவிரைவாகவே கிடைக்கப்பெறும். என்ற நம்பிக்கை எழுந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதுதொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு விரிவான கடிதமொன்றையும் அனுப்பிவைத்துள்ளார். அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ள தாவது, ஜனாதிபதியான தாங்கள் நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமராக பதவி வகித்த காலப்பகுதியில் அரசகரும மொழி கொள்கையை நடைமுறைப்படுத்தலுக்கு அமைவாக இரண்டாம்மொழி ஆசிரியர்களை அரச பாடசாலைகளில் இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதன்படி கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களின் அடிப்படையில் 1200 பேர் தெரிவு செய்யப்பட்டு அரசகரும மொழிகள் திணைக்களத்தின் கீழ் தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சிகளுக்கும் உள்வாங்கப்பட்டிருந்தனர்.
இவர்களுக்கான தெரிவுக் கடிதங்கள் தங்களது தலைமையில் அலரிமாளி கையில் தேசிய நிகழ்வாக அறிமுகப்ப டுத்தி வழங்கப்பட்டிருந்தன. இதன்பின்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் காரணமாக மேற்படி நியமனங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை புதிய அரசாங்கம் தற்காலிக மாக இடைநிறுத்தியது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மேற்படி 1200 பேருக்கும் நியமனங்களை வழங்குவதற்கான எந்தவிதமான நடவடிக்கைகளும் பிற்காலததில் மேற்கொள்ளப்பட வில்லை. மேற்படி நியமனங்களை எதிர்பார்த்திருந்தவர்கள் தற்போது வரையில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
ஆகவே அவர்களுக்கான நியமனங்களை உடனடியாக பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்விடயத்தில் தங்களது மேலான கவனத்தை செலுத்துமாறும் தயவாக கேட்டுக் கொள்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.