உலகில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க இலங்கை உள்ளிட்ட அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளால் மாத்திரம் முடியாது எனவும் சூழலை மாசுபடுத்துவதற்கு காரணமாக உள்ள அபிவிருத்தியடைந்த நாடுகள் நிதியுதவி அளித்து இதற்குப் பங்களிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு தேவையான வளங்களை பெற்றுக்கொடுக்க இலங்கை முதன்மையான முயற்சிகளை எடுக்கும் எனவும் ஜனாதிபதி உறுதியளித்தார்.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற 2021-2022 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி சுற்றாடல் விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய சுற்றாடல் அதிகார சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட “ஜனாதிபதி சுற்றாடல் விருதுகள் 2021-2022” இல், கைத்தொழில், வணிகம், திட்டங்கள் மற்றும் நிறுவனங்கள், ஊடகங்கள் மற்றும் சமூகம் ஆகிய முக்கிய துறைகளின் கீழ் 90 பேருக்கு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல விருதுகள் வழங்கப்பட்டன.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் தங்க விருதுகள் வழங்கி வைக்கப்பட்டதுடன், சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் இனால் ஜனாதிபதிக்கு நினைவுச் சின்னம் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.
விருது வழங்கும் நிகழ்வின் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தங்க விருது பெற்றவர்களுடன் குழு புகைப்படத்திலும் இணைந்து கொண்டார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி,
இந்த நாட்டின் சுற்றாடலைப் பாதுகாப்பதற்கு பங்களித்ததற்காக விருது பெற்ற உங்கள் அனைவரையும் நான் பாராட்ட வேண்டும். அதற்காக தங்களை அர்ப்பணித்த அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனக்கு முன்னர் உரையாற்றியவர்கள், சுற்றாடல் தொடர்பாக இலங்கை முன்னெடுக்கும் வேலைத்திட்டம் என்ன என்பதை விளக்கியதால், அந்த விடயங்களை மீண்டும் நான் குறிப்பிட எதிர்பார்க்கவில்லை.
சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் தொடர்பான பாராளுமன்ற விவாதத்திலும் இதற்கு முன்னர் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் போட்டிப் பொருளாதாரத்தின் அவசியத்தையும் அதாவது டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் பசுமைப் பொருளாதாரத்தின் அவசியத்தை பற்றியும் நான் உங்களுக்கு விளக்கியிருக்கிறேன்.
பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் மறுசீரமைப்பு தொடங்கும் வேளையில், இலங்கையை பசுமைப் பொருளாதாரமாக மாற்றுவதற்கு நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கை பசுமைப் பொருளாதாரமாக மாறும்போது, அதற்கான புதிய சட்டங்களும் தேவைப்படும். நமது சுற்றாடல் சட்டம் 80 களில் நிறைவேற்றப்பட்டதுடன் அதன் பிறகு பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
எனவே, அடுத்த சில ஆண்டுகளில் புதிய சுற்றாடல் சட்டம் மற்றும் பல புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். மேலும், காலநிலை மாற்றம் தொடர்பான சட்டம், Living Entities Act, ஆகியவற்றை அறிமுகப்படுத்த நாம் எதிர்பார்த்துள்ளோம்.
சிங்கராஜ, ஹோர்டன் சமவெளி, நக்கிள்ஸ் மலைத்தொடர் மற்றும் மஹாவெலி ஆகிய பகுதிகளை Living Entities பகுதிகளாக மாற்றுவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
மேலும், வனப் பாதுகாப்புச் சட்டத்தை கருத்தில் கொண்டு, மீண்டும் காடுகளை உருவாக்கல், முத்துராஜவெல சதுப்பு நிலத்தை பாதுகாத்தல், சுற்றுச்சூழல் அழகை பாதுகாத்தல் போன்றவற்றுக்கு புதிய சட்டம் கொண்டு வரவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். எனவே, எதிர்வரும் ஆண்டில் முன்வைக்கப்பட வேண்டிய ஏராளமான சட்டங்களின் வரைவு தயாரிக்கப்பட வேண்டும்.
மேலும், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க உலகளாவிய பணிகளில் தனித்துவமான பங்கை வகிக்க இலங்கை எதிர்பார்க்கிறது.
அதற்காக காலநிலை மாற்றம் தொடர்பான பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்க நாம் முன்மொழிந்துள்ளோம்.
காலநிலை மாற்றம் தொடர்பான அதிகாரிகள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் ஏனையவர்களை பயிற்றுவித்தல் மற்றும் பட்டப்பின் படிப்பு கற்கைகளையும் இப்பல்கலைக்கழகம் வழங்கும்.
காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்தல், சுற்றுச்சூழல் மற்றும் பசுமைப் பொருளாதாரம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்து முன்னோக்கிச் செல்வதே எமது ஆலோசனையாகும். நம்மைப் போன்ற பல அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்சினை வளப்பற்றாக்குறையாகும். அந்த வளங்களை நாம் எவ்வாறு பெறுவது? இதற்கு பல்வேறு நிதி திட்டங்கள் மற்றும் கருவிகள் உள்ளன.
இந்தத் திட்டங்களின் பலனைப் பெற நாம் முயற்சிக்க வேண்டும். நாம் எவ்வாறு நன்மைகளைப் பெறலாம் மற்றும் திட்டங்களுக்கு எவ்வாறு விண்ணப்பிக்கலாம் என்பதை ஒரு நாடாக இலங்கை நிச்சயமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆனால், உலகில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை இலங்கையால் மட்டும் மாற்ற முடியாது என்பதுதான் பிரச்சினை. நம்மால் மாத்திரம் தனியாக முடியாது. ஏனைய நாடுகளும் இதில் இணைய வேண்டும். இதற்கெல்லாம் போதிய நிதி உள்ளதா என்பதுதான் கேள்வி. குறிப்பாக, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்கும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும் தேவையான நிதியை எவ்வாறு பெற்றுக்கொள்வது?
இந்த கேள்வியை நாம் கேட்க வேண்டும், ஏனென்றால் உண்மையான பாதிப்புகள் நாம் செய்தவையல்ல. மேற்கு நாடுகள் மற்றும் அவ்வாறு அபிவிருத்தி செய்ய முடிவெடுத்த ஏனைய நாடுகளும் தான் உண்மையான அழிவைச் செய்தன.
எனவே, அபிவருத்தி அடைந்த நாடுகள், தொழில்மயமாக்கல் செயல்முறை, பல போர்கள் மூலம், பல்வேறு யுத்தங்களினால், குறிப்பாக இரண்டு உலகப் போர்கள் மற்றும் வியட்நாம் போர் மூலம் காலநிலை பாதிப்பிற்கு பங்களித்தன. இப்போது அதன் விளைவுகளை நாம் அனுபவிக்க வேண்டியேற்பட்டுள்ளது. எனவே காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்பைத் தணிக்க நிதி தேவை என்று கூறுகிறோம். நம்மிடம் உள்ளதைத் தவிர, எங்களால் திரட்ட முடிந்ததைத் தவிர அதற்குப் பொறுப்பானவர்களிடமிருந்து நிதியைப் பெற வேண்டும்.
காலநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க எல்லா நிதியையும் எம்மால் செலவழிக்க முடியாது. நாம் கல்விக்கு பணம் செலவழிக்க வேண்டும். மேலும், சுகாதாரம், உட்கட்டமைப்பு வசதிகள் என அனைத்திலும் கவனம் செலுத்த வேண்டும். இதற்கு போதுமான பணம் எங்களிடம் இல்லை.
உலகின் சில முன்னேறிய நாடுகள் தங்களிடமும் போதுமான பணம் இல்லை என்று கூறுகின்றன. என்னைப் பொறுத்தவரை, இது ஒரு பதில் அல்ல. அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலில், இழப்பு மற்றும் சேதக் கோட்பாடு ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் பணம் இல்லை என்றால், இந்த முடிவுகளை செயல்படுத்த முடியாத நிலை எற்படும்.
உதாரணமாக, ரஷ்ய-உக்ரைன் போருக்கு செலவழிக்கும் பணத்தை நாம் கருத்தில் கொண்டால், ரஷ்யா ஒரு பக்கம் அதிக நிதியை செலவழிப்பதோடு, மேற்குலகம் மறுபுறம் நிறைய பணத்தை செலவழிக்கிறது. அமெரிக்கா மட்டும் உக்ரைனுக்கு 100 பில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது.
மேலும், இந்து-பசுபிக் பிராந்தியத்தில் பதட்டமான சூழ்நிலை உருவாகி வருகிறது. சம்பந்தப்பட்ட நாடுகள் அதிக அளவில் விமானங்கள் மற்றும் போக்குவரத்துக் கப்பல்களைப் பயன்படுத்தி தங்கள் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு பெருமளவு பணத்தைச் செலவிடுகின்றன. அடுத்த சில ஆண்டுகளில் மாத்திரம் 100 பில்லியன் டொலர்களுக்கு மேல் இதற்காக செலவிடப்படவுள்ளது.
அமெரிக்கா, சீனா, இந்தியா, ஜப்பான், அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் இதற்காக அதிக பணத்தை செலவழிக்கின்றன. இந்த நாடுகளிடம் பணம் இருப்பதால் தான் ஆயுதங்கள் மற்றும் பல்வேறு நோக்கங்களுக்காக இவ்வளவு நிதியை செலவு செய்கின்றன.
அடுத்த விடயம், பல்வேறு அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் கடன் சுமையில் உள்ளன. இந்த நிலையில் இருந்து மீள நடவடிக்கை எடுத்த முதல் நாடு இலங்கை ஆகும். ஆனால் அது மட்டும் போதாது. கடன் சுமையில் இருக்கும் பல நாடுகளில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் கட்டுப்படுத்துவதற்குப் பயன்படுத்துவதற்கான வளங்கள் இல்லை.
இது ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றது. ஒருபுறம், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த நிதியை செலவிடல் மற்றும் அந்த நிதியை பெற்றுக்கொள்வதற்கான இயலுமை. இன்னொரு பக்கம் இந்த அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் கடன் சுமை. இந்த இரண்டு பிரச்சினைகளும் ஒன்றாக இணைக்கப்பட்ட இரண்டு பிரச்சினைகள் ஆகும்.
எனவே நாம் இது குறித்து குரல் எழுப்புவதோடு கலந்துரையாடுவதும் அவசியம். அடுத்த காலநிலை மாநாட்டில் இந்தப் பிரச்சினையை இலங்கை நிச்சயமாக எழுப்பும் எதிர்பார்க்கின்றது.
உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் எங்களின் அனைத்து திட்டங்களையும் உங்களுக்கு தெளிவுபடுத்தவே நான் விரும்புகிறேன். சுற்றாடல் அமைச்சர் சர்வதேச அளவில் எடுக்கும் முயற்சிகளுக்கு தலைமை வகிப்பதோடு, அவருக்கு வெளியுறவு அமைச்சும் ஆதரவு வழங்குகிறது. இது நமது வெளியுறவுக் கொள்கையின் முக்கிய அங்கமாகும். காலநிலை மாற்றதால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்வதற்கு தேவையான வளங்களை அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு பெற்றுக் கொடுப்பதில் இலங்கை முன்னணியில் இருப்பதை நான் உறுதி செய்கிறேன் என்றார்.
இங்கு உரையாற்றிய சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட்,
நாம் செய்யும் அனைத்தும் சுற்றாடலை அடிப்படையாகக் கொண்டது என்று ஜனாதிபதி உறுதியாக நம்புகிறார். சுற்றுச்சூழலைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதோடு, நமது ஆரோக்கியம், சமூகங்கள், குடும்பங்கள் மற்றும் நமது நாட்டைப் பாதுகாக்கவும் நாங்கள் பணியாற்றுகிறோம். அதன் காரணமாகவே எமது நீர், காற்று, நிலம் ஆகியவற்றைப் பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இந்த 90 விசேட நபர்களை ஜனாதிபதி பாராட்டினார்.
அவர்கள் நமது தேசத்தின் எதிர்காலம் மற்றும் நாம் பாராட்டும் மக்கள் மற்றும் நிறுவனங்கள், நமது குழந்தைகளுக்கு உரிமையாகவுள்ள எதிர்கால உலகத்தைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணித்தவர்கள். குறிப்பாக சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் வர்த்தக சமூகத்தின் அர்ப்பணிப்பும் ஆர்வமும் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.
ஜனாதிபதியின் தொலைநோக்கான தலைமைத்துவத்தின் கீழ், நமது பல்லுயிரியலைப் பாதுகாக்கவும், காலநிலை மாற்றத்தின் விளைவுகளைத் தணிக்கவும், அவற்றை மாற்றியமைக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் அரசாங்கம் முன்னணியில் உள்ளது.
சுற்றாடல் அமைச்சின் செயலாளர் கலாநிதி அனில் ஜாசிங்க, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சுபுன் .எஸ். பத்திரகே, பணிப்பாளர் நாயகம் பி.பி ஹேமந்த ஜயசிங்க, புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகத்தின் தலைவர் ஆர். சஞ்சீபன், பணிப்பாளர் நாயகம் அஜித் பிரேம் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.