சூடானில் சட்டவிரோத ஆயுத,குழுக்களுக்கும் சூடான் இராணுவத்திற்கும் இடையிலான மோதல்கள் நடந்து இரண்டு வாரங்கள் கடந்துவிட்டன.
பல சந்தர்ப்பங்களில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும், நாட்டின் தலைநகர் கார்டூம் உட்பட பல நகரங்களில் மோதல்கள் தொடர்கின்றன.
வன்முறை மோதல்களில் 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும், 4,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவூதி அரசாங்கத்தின் ஆதரவுடன் தற்போது சூடானில் தங்கியுள்ள இலங்கையர்களை மீட்கும் நடவடிக்கையில் வெளிவிவகார அமைச்சு தொடர்ந்து ஈடுபட்டுள்ளது.
சூடானில் இந்த நெருக்கடியான சூழ்நிலையில், வெளிநாட்டினரை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையில், கார்ட்டூமில் சிக்கிய துருக்கிய பிரஜைகளை மீட்க வந்த துருக்கிய விமானப்படைக்கு சொந்தமான C130 விமானம், விரைவு ஆதரவுப் படைகள் எனப்படும் ஆயுதக் குழுக்களால் சுடப்பட்டது.
விமானம் தரையிறங்கும் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதுடன், விமானத்தின் எரிபொருள் அமைப்பும் சேதமடைந்தது.
இதற்கிடையில், மீட்பு நடவடிக்கை குறித்து நேரலையில் செய்தி வெளியிட்ட SKY NEWS செய்தியாளர், சூடானில் இருந்து வெளியேறும் மக்களிடையே தனது உறவினரைப் பார்த்து நெகிழ்ந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.