பாரம்பரிய அரசியலில் இருந்து விடுபட்டு நாட்டை பற்றி புதிதாக சிந்தித்து புதிய பாதையில் பயணிக்கும் கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சியை மாற்றுவோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைத்து ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்தார்.
2048 இலங்கையின் அபிவிருத்திக்கான ஆண்டாகும் என்பதை வலியுறுத்திய ஜனாதிபதி, அந்தப் பயணத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் மக்களும் கைகோர்ப்பார்கள் என நம்புவதாகவும் தெரிவித்தார்.
இலத்திரனியல் தொழில்நுட்பத்தின் ஊடாக கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இன்று (01) இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின நிகழ்வில் இலத்திரனியல் தொழில்நுட்பத்தினூடாக உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“2048 வெல்வோம்” என்ற தொனிப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மேதிக் கொண்டாட்டத்தில் 68 பல்வேறு தொழில்சார் சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் வடக்கு மற்றும் கிழக்கு உட்பட நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
ஆசியாவின் இரண்டாவது வலுவான பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக இலங்கையை கட்டியெழுப்பிய டீ.எஸ். சேனாநாயக்கவினதும் திறந்த பொருளாதாரத்தில் நாட்டை முன்னோக்கி கொண்டு சென்ற ஜே.ஆர். ஜயவர்தனவினதும் வேலைத்திட்டத்தின் பிரகாரம் இலங்கை மீளக் கட்டியெழுப்பப்படும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
ஐக்கிய தேசியக் கட்சி எப்போதும் நாட்டைப் பற்றி சிந்திக்கும் அதேவேளை கொள்கை அரசியலிலும் ஈடுபடும் கட்சி என்பதை வலியுறுத்திய ஜனாதிபதி, ஒருபோதும் அந்தக் கொள்கையில் இருந்து விலகவில்லை எனவும் தெரிவித்தார்.
இந்த நாட்டின் அரசியல் முறைமையில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என்ற இளைஞர்களின் கோரிக்கையை சற்றும் மறந்துவிடவில்லை. பாராளுமன்ற தெரிவுக்குழுக்கள் மற்றும் மேற்பார்வைக் குழுக்களுக்கு தலா ஐந்து இளைஞர் பிரதிநிதிகளை நியமிக்கும் பணி இம்மாதம் நிறைவடையவுள்ளது. கரு ஜயசூரியவின் பிரேரணையின் பிரகாரம் மக்கள் சபை தொடர்பான வரைவு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இலங்கையிலுள்ள அனைத்து சமூகங்களுக்கும் நன்மை பயக்கும் கொள்கைகளுக்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்புடன், நாட்டின் நீண்டகால இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான உடன்பாட்டு இந்த ஆண்டு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் இது மிகவும் முக்கியமானது என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.