IPL  தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிகள் இடையிலான ஆட்டத்தின் போது இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலி, முன்னாள் தொடக்க வீரர் கவுதம் கம்பீர் ஆகியோர் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கிரிக்கெட் அரங்கில் இது பெரும் விவாதப்பொருளாக மாறி உள்ள நிலையில் இந்த விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு BCCI இருவருக்கும் போட்டியின் ஊதியத்தில் 100 சதவீதத்தை அபராதமாக விதித்துள்ளது.

IPL தொடரில் நேற்று முன்தினம் இரவு லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.

127 ரன்கள் இலக்கை துரத்திய லக்னோ அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்த ஆட்டம் முடிவடைந்ததும் பெங்களூரு அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலிக்கும், லக்னோ அணியின் வழிகாட்டியான இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர்கவுதம் கம்பீருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

லக்னோ அணியின் பேட்டிங் தொடங்கியதில் இருந்தே பீல்டிங்கில் விராட் கோலி அதீத ஆக்ரோஷம் காட்டினார்.

ஒரு விக்கெட் சரிந்தபோதும் அவர், காட்டிய ஆக்ரோஷங்கள் எல்லை மீறும் வகையிலேயே இருந்தன. \

பாண்டியா லாங் ஆஃப் திசையில் அடித்த பந்தை எல்லைக்கோட்டுக்கு அருகே நின்று கேட்ச் செய்த விராட் கோலி ரசிகர்களை பார்த்து அமைதியாக இருக்குமாறு சைகை செய்தபடியே பறக்கும் முத்தத்தையும் அளித்தார்.

ஆட்டம் முழுவதுமே விராட் கோலி, லக்னோ அணி வீரர்களை வார்த்தை போருக்கு இழுத்தது போன்று தெரிந்தது.

18வது ஓவரின் போது களத்தில் நின்ற நவீன் உல்-ஹக்கிற்கும், விராட் கோலிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

களநடுவர் உடனடியாக தலையிட்டு விராட் கோலியை விலகிச் செல்ல வைத்தார்.

அப்போது விராட் கோலி தனது காலில் உள்ள ஷூவை காண்பித்து அதில் ஒட்டியிருந்த பொருள் ஒன்றை கீழே வீசி ஏதோ கூறினார்.

இது அடுத்த கட்ட வார்த்தை மோதலுக்கு வழிவகுத்தது.

லக்னோ அணி தோல்வி அடைந்த நிலையில் போட்டி முடிவடைந்த பின்னர் இரு அணி வீரர்களும் பரஸ்பரம் கைகுலுக்கினர்.

விராட் கோலியுடன் கை குலுக்கிய நவீன் உல்-ஹக் வாக்குவாதம் செய்தபடி அவரது கையை விலக்கி விட்டார்.

இருவருக்கும் இடையே மேலும் மோதல் ஏற்பட்டுவிடாத வகையில் கிளென் மேக்ஸ்வெல் இருவரையும் விலக்கிவிட்டார்.

தொடர்ந்து சில நொடிகளில் கம்பீர், விராட் கோலியுடன் கடும் வாக்குவாதம் செய்தார்.

இரு அணிகளை சேர்ந்த வீரர்களும் சூழ்ந்திருந்த நிலையில் இருவரும் ஆக்ரோஷமாக பேசத் தொடங்கினர்.

கேப்டன் கே.எல்.ராகுல், சீனியர் வீரரான அமித் மிஸ்ரா தலையிட்டு இருவரும் விலக்கிவிட ஒரு வழியாக மோதல் முடிவுக்கு வந்தது.

இதன் பின்னர் விராட் கோலியுடன், லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் நீண்ட நேரம் உரையாடினார்.

ஜென்டில்மேன் விளையாட்டு என புகழப்படும் கிரிக்கெட்டில் புகழ்பெற்ற இரு வீரர்கள் நடந்து கொண்ட விதம் ஒரு வகையில் முகம் சுழிக்கவே வைத்தது.

சிறிது நேரத்தில் லக்னோ அணியின் தொடக்கவீரர் கைல் மேயர்ஸ், விராட் கோலியிடம் சென்று ஏதோ கூறிக்கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு வந்த கவுதம் கம்பீர், கைல் மேயர்ஸை அழைத்துச் சென்றார்.

இந்த விவகாரத்தில் ஐபிஎல் நிர்வாகம் விராட் கோலிக்கும், கவுதம் கம்பீருக்கும் போட்டி ஊதியத்தில் 100 சதவீதத்தை அபராதமாக விதித்தது.

நன்னடத்தையை மீறியதாகவும், பொருத்தமற்ற கருத்துக்களை தெரிவித்ததாகவும், விளையாட்டின் ஆர்வத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாகவும் இவர்கள் இருவர் மீதும் குற்றச்சாட்டுகளை கூறி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும்வேகப்பந்து வீச்சாளர் நவீன் உல்-ஹக்கிற்கு போட்டியின் ஊதியத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

விராட் கோலியும், கவுதம் கம்பீரும் தங்களது இளமை காலங்களில் டெல்லி அணிக்காக விளையாடி உள்ளனர்.

கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் கேப்டனாக கவுதம் கம்பீர் இருந்த போது பெங்களூரு அணிக்காக விளையாடிய விராட் கோலி முதன்முறையாக மோதலில் ஈடுபட்டார்.

அன்று முதல் இருவருக்கும் இடையே உரசல் இருந்துகொண்டே வந்தது. அவ்வப்போது விராட் கோலி மீது கம்பீர் கடும் விமர்சனங்களையும் முன் வைத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *