பிரித்தானியாவின் புதிய பேரரசராக மூன்றாம் சார்ள்ஸ் மன்னர் இன்று(06) முடிசூட்டப்பட்டார்.

கடந்த செப்டம்பரில்  இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவையடுத்து இளவரசர் மூன்றாம் சார்ள்ஸ், மன்னர் அரியணைக்கு உரித்துடையவரானார்.

இதன் முடிசூட்டு விழா தலைநகர் லண்டனில் அமைந்துள்ள வெஸ்ட்மினிஸ்டர் அபே தேவாலயத்தில் இன்று(06) கோலாகலமாக நடைபெற்றது.

பிரித்தானியாவில் 70 ஆண்டுகள் கழித்து முடிசூட்டு விழாவொன்று நடத்தப்பட்டமை சிறப்பம்சமாகும்.

பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து வெஸ்ட்மினிஸ்டர் தேவாலயம் வரை அரங்கேறிய கண்கவர் வாகனப் பேரணியுடன் முடிசூட்டு விழா ஆரம்பமானது.

இம்முறை மன்னர் சார்ள்ஸும் அவரது மனைவி கமிலாவும் ஒவ்வொரு முடிசூட்டு விழாவுக்கும் பயன்படுத்தப்படும் தங்க இரதத்தில் அல்லாமல் வைரவிழா அரச இரதத்தினூடாக வெஸ்ட்மினிஸ்டர் அபே நோக்கி பயணித்தனர்.

பின்னர் கிரேட் வெஸ்ட் நுழைவாயில் வழியாக உட்பிரவேசித்த சார்ள்ஸ் மன்னர் தேவாலயத்தின் மத்திய பகுதியூடாக சென்று  முடிசூட்டும் இருக்கையில் அமர்ந்தார்.

மன்னரின் வழக்கமான ஆடைகள் தவிர்க்கப்பட்டு வரலாற்றுச் சிறப்புமிக்க புனித எட்வர்ட் மகுடத்தை சூட்டுவதற்காக றோயல் கதிரையில் அமர வைக்கப்பட்டார்.

இதுவரை  26 மன்னர்கள் மற்றும் மகாராணிகளுக்கு இங்கு கிரீடம் அணிவிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

அரசருக்கென்றே சிறப்பாக தயாரிக்கப்படும் புனித எண்ணெய் சார்ள்ஸ் மன்னரின் தலை, உடல் பகுதியில்  தேய்த்துவிடப்பட்டதுடன் அவரது தலை, நெஞ்சு மற்றும் கைகளில் சிலுவை அடையாளமிடப்பட்டு இராஜபிஷேகம் இடம்பெற்றது.

பின்னர் அரசரிடம் மதம் மற்றும் அரச குடும்பத்தின் அதிகாரத்தை கையளிக்கும் வகையில் அரச குடும்ப புனித உருண்டை அளிக்கப்பட்டு அரசு அதிகாரங்களை அளிக்கும் செங்கோல் ஒப்படைக்கப்பட்டது.

இதனையடுத்து நியாயம், கருணை போன்ற உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் வெள்ளை நிறத்தால் உருவாக்கப்பட்ட வாத்து ஒன்றும் கையளிக்கப்பட்டது.

அதன் பின்பு இறுதியாக மன்னரின் தலையில் ஆர்ச் பிஷப் புனித எட்வர்ட்டின் கிரீடம் சூட்டப்பட்டது.

இதற்கமைய புனித எட்வர்ட்டின் கிரீடத்தை சூடிய 07 ஆவது  மன்னராக மூன்றாம் சார்ள்ஸ் மன்னர் வரலாற்றில் பதிவானார்.

அவருக்கு முன்பாக இரண்டாம் சார்ள்ஸ், இரண்டாம் ஜேம்ஸ், மூன்றாம் வில்லியம், ஐந்தாம் ஜோர்ஜ், ஆறாம் ஜோர்ஜ் மற்றும் இறுதியாக 1953 ஆம் ஆண்டு இரண்டாம் எலிசபெத் மாகாராணி ஆகியோர் எட்வர்ட் கிரீடத்தை சூடியுள்ளனர்.

22 கரட் தங்கத்தால் உருவாக்கப்பட்ட 360 ஆண்டுகள் பழமையான இந்தக் கிரீடம் 30 சென்றிமீற்றருக்கும் அதிக உயரமும் 2 தசம் 23 கிலோகிராம் எடையும் கொண்டதாகும்.

இதன்போது ட்ரம்பட் வாத்தியம் இசைக்கப்பட்டதுடன் ஐக்கிய இராச்சியம் முழுவதும் மரியாதை வேட்டுக்களும் தீர்க்கப்பட்டன.

எளிமையான முறையில் இடம்பெற்ற இந்த முடிசூட்டு விழாவில் இராணி கமிலாவுக்கு உரிய சடங்குகள் நிறைவேற்றப்பட்டு இராணிக்கான கிரீடம் சூட்டப்பட்டு அரியணையில் அமர்த்தப்பட்டார்.

ஐந்தாம் ஜோர்ஜ் மன்னரின் முடிசூட்டு விழாவில் இராணி மேரியின் முடிசூட்டு விழாவிற்காக பயன்படுத்தப்பட்ட கிரீடமே அவருக்கு சூட்டப்பட்டது.

இதனையடுத்து மன்னரும் இராணியும் அவரவர் சிம்மாசனங்களில் இருந்து எழுந்து புனித எட்வர்ட் தேவாலயம் நோக்கிச் சென்றனர்.

அங்கு மன்னரின் தலையிலிருந்து புனித எட்வர்ட் கிரீடம் கழற்றப்பட்டதுன் மன்னருக்கான முடிசூட்டப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்ட பின்னர் அங்கிருந்து வௌியேறினர்.

பின்னர் மன்னரும் அரச குடும்பத்தினரும் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அவர்கள் வந்த அதே வழியில் மீண்டும் புறப்பட்டனர்.​

1831 இல் மன்னர் ஆறாம் வில்லியம்  முடிசூடப்பட்டதிலிருந்து ஒவ்வொரு முடிசூட்டு விழாவிலும் பயன்படுத்தப்பட்டுவந்த 260 ஆண்டுகள் பழமையான தங்க அரச இரதத்தில் இவர்கள் இம்முறை பயணித்தமை விசேட அம்சமாகும்.

74 ஆவது வயதில் பிரித்தானிய மன்னராக மூன்றாம் சார்ள்ஸ் மன்னர் முடிசூடியிருக்கிறார்.

1948 ஆம் ஆண்டு முடிக்குரிய இளவரசராக பிறந்த சார்ள்ஸ் மன்னர் 1969 ஆம் ஆண்டு வேல்ஸின் இளவரசராக முடிசூட்டப்பட்டார்.

1971 ஆம் ஆண்டு இராணுவத்தில் இணைந்த அவர் 1976 ஆம் ஆண்டு தொண்டு நிறுவனமொன்றை ஆரம்பித்ததுடன் 1981 ஆம் ஆண்டு டயனா ஸ்பென்ஸரை மணமுடித்தார்.

1982 ஆம் ஆண்டு இளவரசர் வில்லியமும் 1984 ஆம் ஆண்டு இளவரசர் ஹரியும் பிறந்தனர்.

1996 ஆம் ஆண்டு இளவரசி டயனாவுடனான விவாகரத்தையடுத்து மூன்றாம் சார்ள்ஸ் மன்னர் 2005 ஆம் ஆண்டு இளவரசி கமிலாவை கரம்பிடித்தார்.

இன்று நடைபெற்ற முடிசூட்டு விழாவில் அரச குடும்பத்தின் உறுப்பினர்கள், 203 நாடுகளைச் சேர்ந்த அரச தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் உள்ளிட்ட பெருந்திரளானோர் கலந்துகொண்டிருந்தனர்.

முடிசூட்டு விழாவுக்கான பாதுகாப்பு கடமைகளில் 11 ஆயிரத்திற்கும் அதிகளவான பாதுகாப்பு படைகளின் உறுப்பினர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்ததுடன் முடிசூட்டு விழா பல சர்வதேச ஊடகங்களில் நேரடி ஔிபரப்பப்பட்டது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *