அடுத்த பத்து வருடங்களில் கல்வித்துறையை நவீன மயப்படுத்தி தன்னிறைவான திறன்களை கொண்ட மாணவச் சமூகம் ஒன்றை கட்டியெழுப்புவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.
கல்வித்துறையை நவீன மயப்படுத்துவதற்கான அமைச்சரவை குழுவும் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் மறுசீரமைப்புச் செயற்பாடுகள் விரைவில் முன்னெடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
கடந்த பத்து வருடங்களில் சில அரச நிறுவனங்களுக்காக செலவிட்ட பணத்தை கல்விக்காக செலவிட்டிருந்தால் ஆசியாவின் மிகச் சிறந்த கல்வித்துறை இலங்கை வசமாகியிருக்கும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
திறன் மற்றும் தொழில் கண்காட்சியான “skills Expo 2023” நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இன்னும் பத்து ஆண்டுகளில் நமது கல்வி முறையில் மாற்றம் ஏற்படும்.
ஏனென்றால், கண்ணுக்குத் தெரியாத எதிர்காலத்திற்காக நாம் கல்வியை உருவாக்க வேண்டும்.
அதற்கான பலமான வேலைத்திட்டம் தேவை. இளைஞர்களுக்கு இதுபற்றி முறையாகத் தெளிவுபடுத்தி, எதிர்காலத்திற்குத் தேவையான அறிவும் திறமையும் கொண்ட ஒரு பரிபூரண சமுதாயத்தை உருவாக்குவதே எனது எதிர்பார்ப்பு ஆகும். அதற்குத் தேவையான நிதியை 2024ஆம் ஆண்டு முதல் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி, கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் (ஓய்வுபெற்ற) ஜெனரல், கமல் குணரத்ன மற்றும் வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் அரச அதிகாரிகள் உள்ளிட்ட அதிதிகள் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.