இன்னும் 25 ஆண்டுகளில் நாடு வெற்றிப் பாதையை எட்டியிருக்கும் போது, “நாம் எடுத்த நடவடிக்கையே நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுத்தது” என இளைஞர் சமூகம் பெருமிதம் கொள்ள முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லை வோடர்ஸ் ஹெட்ஜில் நடைபெற்ற பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவின் இளம் உறுப்பினர்களை தெளிவுபடுத்துவதற்கான வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“எமது நாடு பல துரதிஷ்டமான யுகங்களை கடந்து வந்துவிட்டது. இளையோரின் கலவரங்களை கண்டது, முப்பது வருட யுத்தம் ஒன்றையும் கண்டது.
நாட்டின் நிலைமையை வழமைக்கு திரும்பச் செய்ய இன்று பல்வேறு முனைப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
கடந்த காலத்தில் நாடு மிகப்பெரிய நெருக்கடிக்கு முகம்கொடுத்தது.
அதற்கு ஆர்ப்பாட்டம் செய்வதே தீர்வாகும் என சிலர் எண்ணிக்கொண்டிருந்தனர்.
வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதால் எமக்கு கிடைத்த பலன் என்ன? இவ்வாறனதொரு யுகத்தை கடந்தே இந்த இடத்திற்கு நாம் வந்துள்ளோம்.
நாட்டில் நடைமுறைப்புடுத்தப்படும் அனைத்து சட்டங்களும் சட்டமூலங்களும் துறைசார் மேற்பார்வை குழுக்களால் கண்காணிக்கப்படுகின்றன. பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படும் முன்பாக தீர்க்கமாக ஆராயப்படும். இறுதியில் பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்படும்.
அவ்வாறான விடயங்களுக்கே இளையவர்களின் அறிவுடன் கூடிய கலந்துரையாடல்கள் அவசியப்படுகின்றன.
அதனாலேயே நாட்டின் எதிர்கால திட்டங்கள் வகுக்கப்பட்டு அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
நம் சகலரினதும் கருத்துகள் நாட்டிற்கு அவசியமாகும். கலவரங்களுக்கும் யுத்தங்களுக்கும் முகம்கொடுத்து பொருளாதார ரீதியில் விழுந்து கிடக்கும் நாட்டிற்கு அவை வலுவாக அமைய வேண்டும். எம்மிடத்தில் பெறுமதியான சூழலும், வலுவும், பெறுமதியான அறிவை கொண்ட மக்களும் உள்ளனர் அவ்வாறானதொரு நாடு எவரிடத்திலும் மண்டியிட வேண்டிய அவசியமில்லை.’’ என்று குறிப்பிட்டார்.