துருக்கி ஜனாதிபதி எர்டோகன் தனது அரசியல் பயணத்தில் கடினமான தேர்தலை எதிர்நோக்கி இருக்கிறார்.
துருக்கி பொதுத் தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான 50% வாக்குகள் தற்போதைய ஜனாதிபதி எர்டோகன் உட்பட யாருக்கும் கிடைக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து துருக்கியில் வரும் 28ஆம் திகதி இரண்டாம் கட்ட தேர்தல் நடத்தப்படவுள்ளது.
69 வயதாகும் தய்யீப் எர்டோகன் கடந்த 2003ஆம் ஆண்டு முதல் துருக்கியை ஆட்சி செய்து வருகிறார்.
2003 முதல் 2014 வரை துருக்கியின் பிரதமராக இருந்த அவர், 2014 ஆம் ஆண்டு அப்பதவியை கலைத்து நாட்டின் உச்ச அதிகாரமாக ஜனாதிபதி பதவியை கொண்டு வந்தார்.
இந்த நிலையில், கடந்த பெப்ரவரி 6 திகதி துருக்கி – சிரிய எல்லையில் அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர பூகம்பங்களால் 50,000க்கும் அதிகமானோர் பலியாகினர்.
இந்த பூகம்பத்தின்போது மீட்புப் பணிகளை சரிவர முடுக்கிவிடவில்லை என்று ஜனாதிபதி எர்டோகன் மீது பொதுமக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர்.
பொருளாதார ரீதியாகவும் எர்டோகன் மீது மக்களிடையே எதிர்ப்பு அலை இருந்தது.
இந்தச் சூழலில் பெரும் பதற்றத்துக்கிடையே நேற்று (மே 15) துருக்கி ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது.
இதில் ஜனாதிபதி எர்டோகன் 49.6% வாக்குகளும், கெமல் கிலிக்டரோக்லு 44.7% வாக்குகளும், தேசியவாத வேட்பாளர் சின ஒகன் 5.2% வாக்குகளும் பெற்றனர்.
துருக்கியின் அரசியல் வழக்கம்படி தேர்தலில் 50% வாக்குகளை பெற்றால்தான், அது பெரும்பான்மை. அந்த வகையில் 0.4% வாக்குகள் குறைவாக பெற்றதால், பெரும்பான்மையை எர்டோகன் தவறவிட்டார்.
இதனைத் தொடர்ந்து அடுத்தச் சுற்று தேர்தல் துருக்கியில் மே 28 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
தேர்தல் குறித்து எர்டோகன் கூறும்போது, “மே 28 ஆம் திகதி தேர்தலில் வெற்றி பெற்று வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியைப் பெறுவோம்” என தெரிவித்துள்ளார்.