சப்ரகமுவ மாகாண பாடசாலைகளில் ஆசிரியர்களுக்கான பெற்றிடங்களை நிரப்பும் போது தமிழ் மொழி மூலமான பாடசாலைகளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளமை அங்கிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் மற்றும் அதிருப்திகளில் இருந்து உறுதியாகியுள்ளது.
ஆகவே இனி வரும் காலங்களில் இவ்வாறு பாடசாலைகளில் ஏற்பட்டுள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் செயற்றிட்டத்தில் மாகாண கல்வி அமைச்சு மற்றும் மாகாண கல்வித் திணைக்களம் ஆகியவற்றின் தமிழ் மொழி மூலமா மான அதிகாரிகளை உள்வாங்கி அவர்களது ஆலோசனைகளைப் பெற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவிடம் கோரியுள்ளார்.
சப்ரகமுவ மாகாண பாடசாலைகளுக்கு அண்மையில் தேசிய கல்வியற் கல்லூரிகளிலிருந்து வெளியேறியுள்ள டிப்ளோமாதாரிகளை பாடசாலைகளுக்கு ஆசிரியர்களhக நியமிக்கப்படவுள்ள விவகாரம் தொடர்பில் ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் தனது கடிதத்தில் மேலும் கூறியுள்ளதாவது….
சப்ரமுவ மாகாண பாடசாலைகளில் நிலவிவரும் ஆசிரியர் பெற்றிடங்களை நிரப்புவதில் மாகாண ஆளுநரான தாங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை. இது குறித்து மகிழ்ச்சியடைகிறேன்.
இருப்பினும் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட தங்களது மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து கொள்ளும் பொருட்டான வேலை திட்டத்தில் தமிழ் மொழி மூலம் பாடசாலைகளுக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பதாக அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் கல்வி அபிவிருத்திக் குழுக்களால் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இனிவரும் காலங்களில் இவ்வாறான குறைபாடுகள் இல்லாதிருக்க வேண்டும் என்பது எனது நிலைப்பாடாகும்.
அது மாத்திரமன்றி எதிர்காலங்களில் சப்ரகமுவ மாகாண பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை நியமிக்கும் செயற்றிட்டம் முன்னெடுக்கப்படும் போது மாகாண கல்வித் திணைக்களம் மற்றும் மாகாண கல்வி அமைச்சின் தமிழ் மொழிமூல அதிகாரிகளை உள்வாங்கி அவர்களது ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். அவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது எந்த ஒரு பாடசாலைக்கும் அநீதி இழைக்கப்படாது என்பதை உறுதி செய்ய முடியும்.
இவ்விடயம் தொடர்பில் தாங்கள் தலையீடு செய்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வலியுறுத்துவதோடு, அவர்கள் நேர்மையாக செயற்படுவதையும், உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.