ஜப்பான் விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது வெளிவிவகார மற்றும் பொருளாதார கொள்கைகளை உலகிற்கு தெளிவாக எடுத்துரைத்திருப்பது, பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு பெரும் உந்துசக்தியாக அமைந்துள்ளது என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
இலகு ரயில் திட்டத்தை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கும் இந்நாட்டின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஜப்பானின் ஆதரவை மேலும் அதிகரித்துக் கொள்வதற்கும் ஜப்பானிய பிரதமருடனான கலந்துரையாடலில் ஜனாதிபதி மேற்கொண்ட தலையீடானது ஒரு மேம்பட்ட இராஜதந்திர அணுகுமுறை என்றும் அவர் வலியுறுத்தினார்.
நாட்டில் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை மேம்படுத்துவதற்காக உயர்மட்ட வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் வர்த்தக சபைகளுடன் கலந்துரையாடலின் போது ஜனாதிபதியின் வெளிப்படையான கருத்துக்கள் நாட்டின் நற்பெயரை உயர்த்த உதவியது என்றும் அவர் கூறினார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் தயாரிக்கப்படும் ‘101 கதா’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க இதனைக் குறிப்பிட்டார்.